Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் நெருக்கடி: அமெரிக்க நிதி அமைச்சர் எச்சரிக்கை

பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளு மன்றம்) நாட்டின் கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும். இல்லையென்றால் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று அந்நாட்டு நிதி அமைச்சர் ஜேக்கப் லியூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பது:

பிப்ரவரி 7-ம் தேதியில் கருவூலம் தனது அதிகபட்ச கடன் வரம்பை எட்டிவிடும். எனவே பிப்ரவரி கடைசிக்குள் நாட்டின் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால், பல துறைகளுக்கு பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே இதனைத் தவிர்க்க கடன் உச்சவரம்பை உயர்த்துவது அவசியம்.

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை காக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கடன் தொடர்பான நம்பகத்தன்மை யைக் காக்க வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு. நமது நாட்டின் வரலாற்றில் காங்கிரஸ் எப்போதுமே தனது பொறுப்பை தட்டிக் கழித்தது இல்லை.

இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் இதே பிரச்னை தொடர்பாக காங்கிரஸுக்கு கடிதம் எழுதினேன் என்று ஜேக்கப் லியூ கூறியுள்ளார். தற்போது அமெரிக்க கடன் உச்ச வரம்பு 17.3 டிரில்லியன் டாலராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x