Published : 06 Mar 2014 11:11 AM
Last Updated : 06 Mar 2014 11:11 AM

உக்ரைன் விவகாரம்: புதின் அறிவிப்புக்கு ஐரோப்பிய யூனியன் வரவேற்பு

உக்ரைன்மீது போர் தொடுக்கும் எண்ணமோ, அந்நாட்டின் க்ரைமியா பகுதியை தங்கள் நாட்டுடன் இணைக்கும் நோக்கமோ இல்லை என்ற ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அறிவிப்பை ஐரோப்பிய யூனியன் வரவேற்றுள்ளது.

உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்க சர்வதேச அளவிலான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் யோசனையை புதினும் வரவேற்றுள்ளார்.

உக்ரைனின் க்ரைமியா பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்ற புதினின் அறிவிப்பு பதற்றத்தை சற்று தணித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டு அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் உக்ரைனில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு ஆதரவாக ராணுவ கண்காணிப்பு குழுவை அனுப்ப ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. உக்ரைனில் அமைந்துள்ள புதிய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பு அளிப்பதே இக்குழுவின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார விவகாரம் மற்றும் விசா விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து புதின் உக்ரைனில் ரஷ்ய படைகள் தேவையில்லை என்று அறிவித்தார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உக்ரைனில் இப்போது நிலைமை மோசமாகவே உள்ளது. ஆனால் வரும் நாள்களில் பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையுள்ளது என்று ஒபாமா கூறியுள்ளார்.

உக்ரைனில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்வகையில் அமெரிக்கா ஏற்கெனவே வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது. உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஜான் கெர்ரி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x