Published : 17 Jun 2017 10:38 AM
Last Updated : 17 Jun 2017 10:38 AM
ஷெங்கன் விசா என்ற ஒற்றை விசாவைக் கொண்டு பல ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முடிகிறது. இது பயணிகளுக்கு வசதி. அந்த ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாத் துறைகளுக்கும் லாபம்.
ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர் நாடுகளுக்கு மேலும் வசதி. எந்த விசாவுமின்றி ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்குச் செல்லலாம். அங்கு தங்கலாம். வேலை பார்க்கலாம்.
ஆப்பிரிக்க நாடுகளும் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முதல்கட்டமாக ஆப்பிரிக்கர்கள் எந்த ஆப்பிரிக்க தேசத்துக்குள்ளும் தடையின்றிச் செல்ல முடிகிற முயற்சி. சென்ற ஆண்டு ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது.
ருவாண்டாவில் உள்ள கிகாலி என்ற நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ‘புதிய மின்னணு ஆப்பிரிக்க யூனியன் பாஸ்போர்ட்’ ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரம் காட்டியிருக் கிறார்கள்.
அதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் ருவாண்டா மற்றும் சாட் ஆகிய நாடுகளில் நடைபெறத் தொடங்கியுள்ளன. இன்னும் மூன்று வருடங்களில் ஆப்பிரிக்க குடிமகன்கள் அனைவரும் தங்கள் கண்டத்திலுள்ள எந்த நாட்டுக்கும் தடையின்றிச் சென்று வரலாம்.
மற்ற எந்த கண்டத்தையும்விட மிக அதிகமான நாடுகளைக் கொண்டது ஆப்பிரிக்கா. இவற்றில் 13 ஆப்பிரிக்க நாடுகளுக்குள் மட்டுமே சக ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி இப்போதைக்கு நுழைய முடியும் என்ற நிலை உள்ளது. (வேடிக்கை அல்லது கொடுமை என்னவென்றால் அமெரிக்கர்கள் மேலும் அதிக ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா இன்றி நுழைய முடியும்). ஆப்பிரிக்கர்களுக்கிடையே நடக் கும் வணிகத்திற்குக்கூட அதிக சட்ட திட்டங்கள். பலவித லைசென்ஸ்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இதில் பாதியளவு ஆவணங்கள் இருந்தாலே கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்யலாம் என்கிற நிலை.
இதையெல்லாம் எளிமைப் படுத்ததான் ‘புதிய ஆப்பிரிக்க பாஸ்போர்ட்’. கானா இந்த முயற்சி யில் முன்னணியில் நிற்கிறது. ஆப்பிரிக்காவின் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தா லும் கானாவில் வந்து இறங்கிய வுடன் விசாவை உடனடியாகப் பெறலாம். 17 சக ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கானா வர விசாவே தேவையில்லை.
எல்லைகளில்லாத கண்டமாக ஆப்பிரிக்கா மலர்வதற்கான முதல் முயற்சியாக மேற்படி மின்னணு பாஸ்போர்ட் இருக்குமா? ஆப்பிரிக்க யூனியனை பொறுத்த வரை 2063-ல் மொத்த ஆப்பிரிக்காவும் எல்லைகளில்லா மல் மாறிவிடும் என்கிறது. ரொம்பவும் தொலைநோக்குப் பார்வை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT