Published : 22 Oct 2013 11:16 AM
Last Updated : 22 Oct 2013 11:16 AM
பாகிஸ்தானின் நடைபெற்ற இருவேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் 4 போலீஸார் உள்பட 11 பேர் இறந்தனர்.
பலுசிஸ்தான் மாநிலத்தில் ரயில் பாதையில் தி்ங்கள்கிழமை குண்டு வெடித்ததில் அவ்வழியாக சென்ற ஜாபர் விரைவு ரயிலில் பயணம் செய்த 7 பேர் இறந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராவல்பிண்டியிலிருந்து குவெட்டாவை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த ரயில் தேரா முராட் ஜமாலி அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வெடித்ததில் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்தத் தகவல் அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இது தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர் என பாகிஸ்தான் அரசு வானொலி தெரிவித்துள்ளது.
ஜாபர் விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபிக் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ராவல்பிண்டியை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 32 பேர் காயமடைந்தனர்.
4 போலீஸார் பலி
ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர், பெஷாவர் நகரில் உள்ள பஹ்ரிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 2 துணை ஆய்வாளர்கள் உள்பட 4 போலீஸார் இறந்தனர். இந்தத் தாக்குதலுக்கு அன்சருல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT