Published : 04 Oct 2013 08:24 AM Last Updated : 04 Oct 2013 08:24 AM
மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு ஐ.நா. திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல்
அனைத்து அம்சங்களிலும் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையிலான குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை தாராளமாகக் கிடைப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சர்வதேச சமுதாயத்துக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது.
இதில், மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. "இந்தக் கூட்டத்தின் மூலம் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த தீர்மானம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணம். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தத் தீர்மானம் வழிகாட்டியாக இருக்கும்" என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
WRITE A COMMENT