Published : 06 Jan 2014 10:46 AM
Last Updated : 06 Jan 2014 10:46 AM
பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அவர் இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல்-அவிவில் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். பின்னர் சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்குச் சென்ற அவர் அதன் அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். காலை, மாலை என இரண்டு முறை அப் பாஸுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதன்தொடர்ச்சியாக ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ஜான் கெர்ரி, அந்த நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார். பின்னர் சவூதி அரேபியாவுக்குச் சென்ற அவர், அந்த நாட்டு மன்னர் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சு வார்த்தை தொடர்பாகவே அவர்களுடன் கெர்ரி நீண்ட நேரம் விவாதித்தார்.
3 ஆண்டுகளுக்குப் பின்…
பல்வேறு முட்டுக்கட்டைகளால் இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. அமெரிக்காவின் தீவிர முயற்சியால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் அண்மையில் ஒப்புக் கொண்டனர்.
பாலஸ்தீனம் தரப்பில் மூத்த தலைவர் சாயிப் எரிகேட் தலைமையிலான குழுவும் இஸ்ரேல் தரப்பில் நீதித் துறை அமைச்சர் ஜிபி லிவ்னி தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெ டுத்துச் செல்வதற்காக ஜான் கெர்ரி கடந்த 3 நாள்களாக மத்திய கிழக்கில் முகாமிட்டு இருதரப்பினரையும் சந்தித் துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஜெரு சலேத்தில் நிருபர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவர், அமைதிப் பேச்சில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அப்பாஸ் கோரிக்கை
1967 போரில் பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும். 1967-ல் இருந்த எல்லைகளை அந்த நாடு அங்கீகரிக்க வேண்டும் என்று பாலஸ்தீனம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
மேலும் மேற்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனத்தின் புதிய எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றும் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தி வருகிறார். தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜோர்டான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுமாறு ஜான் கெர்ரி யோசனை தெரிவித்திருந்தார். இதனை இஸ்ரேல் ஏற்க மறுத்துள்ளது.
அங்கிருந்து படைகள் வெளியேறினால் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக் கொள் வார்கள். எனவே படைகளை ஒருபோதும் வாபஸ் பெற மாட்டோம் என்று இஸ்ரேல் மூத்த அமைச்சர் மோஷி யாலோன் அறிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்தாலும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் ஏப்ரலுக்குள் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.-பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT