Published : 15 Oct 2014 10:20 AM
Last Updated : 15 Oct 2014 10:20 AM
இராக் மற்றும் சிரியா பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, தபீக் என்ற பத்திரிகையை வெளியிட்டுள்ளது. அதில், இராக்கில் உள்ள சிறுபான்மையினத்தவர்களான யஜீதுகளை அடிமைப்படுத்தி விற்பனை செய்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இராக் வடக்கே யஜீதுகள் வசிக்கும் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி பலர் சிஞ்சார் மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு தற்காலிக முகாம் அமைத்து தங்கியிருந்த யஜீதுகளை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் சுற்றி வளைத்தனர். தற்போது அவர்களை அடிமைப்படுத்தி, விற்பனை செய்து வருவதாக மனித உரிமை அமைப்பொன்று கூறியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐ.எஸ்.ஸின் பத்திரிகையான ‘தபீக்கில்’ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சிறை வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யஜீது இனத்தைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டு ஐ.எஸ். அமைப்பினரால் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக அந்த இனத்தின் பெண்களையும், குழந்தைகளையும் ஷரியா சட்டத்தின்படி ஐ.எஸ். வீரர்கள் தங்களுக்குள் பங்குப் போட்டுக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கட்டுரையில் “எதிர்காலத்தில் ரோமை நாங்கள் ஆள்வோம். உங்களின் மதச்சின்னங்களை உடைத்தெறிவோம். உங்களின் பெண்களை அடிமைப்படுத்துவோம்” என்ற ஐ.எஸ். செய்தித்தொடர்பாளர் முகமது அல் – அட்னானி பேச்சு இடம்பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் பிணைக் கைதி
பேச்சு இதனிடையே, ஐ.எஸ். பிடியில் இருக்கும் பிரிட்டிஷ் பிணைக் கைதி ஜான் கான்ட்லி பேசும் நான்காவது வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசியுள்ளதாவது:
“ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அந்நாடுகளுக்குத் தோல்வி ஏற்படும். பிணைக் கைதிகள் ஸ்டீவன் சாட்லாப், ஆலன் ஹென்னிங் ஆகியோரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றது, அவர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு பதிலடியாக மேற்கத்திய நாடுகள் போரில் ஈடுபட்டால், அதற்காக பல மில்லியன் டாலர்கள் செலவிட வேண்டியதிருக்கும். இது அந்நாடுகளை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்திவிடும். இதன் மூலம் ஐ.எஸ்.க்கு வெற்றி கிடைத்துவிடும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT