Published : 17 Mar 2014 11:52 AM
Last Updated : 17 Mar 2014 11:52 AM
இலங்கை ராணுவ போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன.
இலங்கையில் 2009-ல் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெனீவாவில் தற்போது நடைபெறும் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தில் தற்போது பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இலங்கை அரசுக்கு எதிராக தற்போது கடுமையான ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
போரின்போது இருதரப்பிலும் மீறப்பட்ட மனித உரிமை கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் “இருதரப்பு போர்க்குற்றங்கள்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் “இருதரப்பு தீவிர போர்க்குற்றங்கள்” என்று திருத்தப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே தற்போது தீர்மானத்தில் திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா யோசனை இந்தியாவின் கருத்துகளும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள் ளன. போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் இலங்கையில் பன்னாட்டு ஆய்வாளர்கள் அனுமதியின்றி நுழையக்கூடாது. அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றே அந்த நாட்டுக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இலங்கைக்குள் செல்ல வேண்டும் என்று இந்தியத் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT