Published : 09 Mar 2017 01:36 PM
Last Updated : 09 Mar 2017 01:36 PM
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் எல்லைப்பகுதியை மீண்டும் பாகிஸ்தான் மூடியுள்ளது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லையையும் அடிக்கடி மூடுவது வாடிக்கையாகி வருகிறது.
முன்னதாக மூடப்பட்டிருந்த ஆப்கனுடனான எல்லை, கடந்த முறை தற்காலிகமாக, 2 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டிருந்தது. இதில் 35,000 மக்கள் எல்லையைக் கடந்தனர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலே இம்முறை எல்லையை மூடுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம், செவான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 88 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய பதில் தாக்குதலில் 130 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், எல்லை மேலாண்மை அதிகாரிகள் ஃபயாஸ் கான் மற்றும் இர்ஃபான் தூர் ஆகியோர், வியாழக்கிழமை அன்று தோர்க்காம் மற்றும் சமான் எல்லைப் பகுதிகள் காலவரையறை இன்றி, மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளை ஒடுக்குவதில் தோற்றுவிட்டதாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தங்களை மாற்றி மாற்றிக் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT