Published : 19 May 2017 03:45 PM
Last Updated : 19 May 2017 03:45 PM
உலகம் முழுவதும் 28,000க்கும் மேற்பட்ட மருத்துவக் குணம் வாய்ந்த தாவர இனங்கள் இருப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாவர இனங்களைப் பற்றிய முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அவற்றின் மருத்துவத் தன்மை மக்களிடம் சென்றடையவில்லை எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ராயல் பொட்டானிகல் கார்டன் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, "சுமார் 8.5 மில்லியன் இனங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் 12 நாடுகளைச் சேர்ந்த 128 விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கிட்டதட்ட 28,000 தாவர இனங்கள் மருத்துவக் குணம் வாய்ந்தவை.
ஆனால் அவற்றில் வெறும் 16% மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த ஆய்வில் சிறப்பம்சமாக பார்கிஸன் (நரம்பு பாதிப்பு) நோயை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்ட தாவர இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மலேரியா மற்றும் சர்க்கரை வியாதிகளை நிவர்த்திக்கும் மருத்துவ பயன் கொண்ட தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக மலேரியாவுக்கு மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் 4,00,000 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மலேரியா நோயைக் குணப்படுத்த குயினைன், ஆர்டிமிஸினின் போன்ற தாவர இனங்கள் சிறந்த மருத்துவக் குணங்கள் கொண்டவை”என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்சியாளர் சாரா வைஸ் கூறும்போது, "ஒவ்வொரு வருடமும் 340 மில்லியன் ஹெக்டேர் அளவு கொண்ட வனப் பகுதிகள் காட்டுத் தீ காரணமாக எரிக்கின்றன. இதனுடன் சேர்ந்து ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களும் அழிகின்றன. அதுமட்டுமில்லாது பூச்சி மருந்துகள் காரணமாக ஏராளமான மருத்துவத் தன்மை கொண்ட தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் தாவர மருத்துவப் பயன்கள் குறித்த உரையாடலை உலக அரங்கில் ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT