Last Updated : 19 Sep, 2016 03:33 PM

 

Published : 19 Sep 2016 03:33 PM
Last Updated : 19 Sep 2016 03:33 PM

இந்தோனேசிய 4 மாத காட்டுத்தீ தாக்கத்துக்கு 1 லட்சம் இறப்புகள்: ஆய்வு

'கடந்த ஆண்டில் இந்தோனேசியாவில் 4 மாதங்களுக்கு நீடித்த காட்டுத்தீயின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சுமார் 1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்' என்று விஞ்ஞான ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது .

கடந்த ஆண்டில் இந்தோனேசியாவில் 4 மாதங்களுக்கு நீடித்த காட்டுத்தீயின் காரணமாக பல வாரங்களுக்கு தெற்காசியாவின் சில பகுதிகள் புகைமண்டலமாக மாறியதில் பல்வேறு நோய்களின் தாக்கத்தினால் சுமார் 1 லட்சம் பேர் மரணித்துள்ளார்கள் என்று ஹார்வர்டு மற்றும் கொலம்பிய பல்கலைக் கழக ஆய்வு விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.

Environmental Research Letters என்ற இதழில் வெளியாகவுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை பல ஆய்வாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காட்டுத்தீயிற்குப் பிறகே ஏற்பட்ட கடுமையான மூச்சுக்குழல், நுரையீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்க்குறிகளின் தாக்கங்களினால் சுமார் ஒரு லட்சம் பேர் மரணமடைந்திருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த எண்ணிக்கை சிக்கல் நிரம்பிய பகுப்பாய்வுகளின் மூலம் வந்தடையப்பட்ட எண்ணிக்கையாகும். எனவே இதனை இன்னமும் அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கை தரவு பகுப்பாய்வு ஏற்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆய்வு முன்வைக்கும் காரணம் கவனிக்கத்தக்கது என்று இந்தோனேசிய மருத்துவ விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களுமே தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வினால், இந்தோனேசியாவின் மரக்கூழ் காகித தொழிற்துறையின் நிலப் பயன்பாடு மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம், கடந்த ஆண்டு காட்டுத்தீயிற்கு இந்தோனேசியாவின் மட்கரி மண் கொண்ட நிலப்பகுதிகள் ஒட்டுமொத்தமாக இரையாகியுள்ளது செயற்கைக்கோள் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது 2006-ம் ஆண்டு ஏற்படுத்திய அழிவை விட பெரிய அளவிலானது என்கிறது இந்த ஆய்வு. மேலும் வேளாண்மைக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மட்கரி மண் நிலப்பகுதிகளை மரக்கூழ்/பேப்பர் தயாரிப்புக்குப் பயன்படும் ஆலைகளுக்கான மிகப்பெரிய பண்ணைகளாக மாற்றப்படுவதால் காட்டுத்தீயிற்கு அதிகம் இரையாகிறது.

காட்டுத்தீயினால் ஏற்படும் கடுமையான நீண்ட நாளைய புகை மண்டலத்தினால் இந்தோனேசியா மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்ட மரணங்கள் மூச்சுக்குழல் நோய் தாக்கத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன .இது இந்தோனேசியாவின் அதிகாரபூர்வ மரண எண்ணிக்கையான 19 என்பதை கேள்விக்குட்படுத்தும் பெரிய ஆய்வாகும்.

ஆனால் இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை 4 கோடியே 30 லட்சம் இந்தோனேசியர்கள் காட்டுத்தீ புகைக்கு பாதிப்படைந்துள்ளனர் என்று கூறியதோடு இவர்களுக்கு மூச்சுக்குழல், நுரையீரல் நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது, ஆனால் மரணங்களை காட்டுத்தீ விளைவுகளுடன் ஒப்புநோக்கி பார்க்கவில்லை.

இந்த ஆய்வின் நோக்கம்:

காட்டுத்தீ புகையின் காரணமாக கிளம்பும் பி.எம்.2.5 என்ற நுண் அணுக்களின் தாக்கம் என்ற அளவில் குழந்தைகள் நீங்கலாக பெரியோர்களிடத்தில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியக் கேடுகளை மட்டுமே இந்த ஆய்வு கவனப்படுத்துகிறது. இந்த மரண எண்ணிக்கையில் பெரும்பகுதி இந்தோனேயாவைச் சேர்ந்ததே.

எல்நினோ வறண்ட தாக்கத்தினால் கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை தெற்கு சுமத்ரா போர்னியோவின் இந்தோனேசிய பகுதிகளை புரட்டிப் போட்ட காட்டுத்தீ 1997-ம் ஆண்டு காட்டுத்தீயை விட பயங்கரமானது என்கிறது இந்த ஆய்வு. சுமார் 2,61,000 ஹெக்டேர் நிலப்பரப்புகள் சாம்பலாகியுள்ளன. இந்த காட்டுத்தீ சில சமயங்களில் இயற்கை சீற்றமாகவும் பல வேளைகளில் நிறுவனங்களும், கிராமத்தினரும் வேளாண்மைக்காகவும் மர/காகித தொழிற்சாலைகளுக்காகவும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விண்வெளி நுண் துகள்களால் பாதிக்கப்படும் காற்றில் மாசு உருவாக்க நிகழ்வு மனித ஆரோக்கியத்துக்கு நீண்ட கால ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பவை” என்று இந்த ஆய்வு கூறுகிறது .

இந்த ஆய்வு, கடந்த ஆண்டு காட்டுத்தீயிற்கு பலியானோரை இவ்வாறு பிரிக்கிறது: இந்தோனேசியாவில் மட்டும் 91,600 பேர், மலேசியாவில் 6,500 பேர், சிங்கப்பூரில் 2,200 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x