Published : 09 Oct 2014 09:19 AM
Last Updated : 09 Oct 2014 09:19 AM
ஜெருசலேமில் உள்ள டெம்பிள் மவுன்ட்டில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்ரேல் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் வெடிப்பொருட்களை வீசி பாலஸ்தீன போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் லுபா சாம்ரி கூறியதாவது:
டெம்பிள் மவுன்ட் வழிபாட்டுக்காக புதன்கிழமை காலை திறக்கப்பட்டது. அப்போது, முகமூடி அணிந்திருந்த பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கற்கள், வாணவெடிகள், வெடிப்பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று காவலர்கள் காயமடைந்தனர். அல் அக்ஸா மசூதி வரை போராட்டக்காரர்களை காவல்துறையினர் துரத்தினர். அங்குதான் தடுப்புகளுக்குப் பின் மறைந்து கொண்டு காவல்துறை மீது தாக்குதல் நடத்தினர், என்றார்.
‘புனித புகலிடம்’ என முஸ்லிம்களால் அழைக்கப்படும் டெம்பிள் மவுன்ட் பகுதி யூதர்களுக்கும் மிகப் புனிதமான பகுதியாகும். யூதர்கள், முஸ்லிம்கள் இருதரப்பினருமே இந்த இடத்துக்கு உரிமை கோரி வருகின்றனர். இப்பகுதி 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. யூத- அரபு மோதலில் முக்கியக்காரணியாகக் கருதப்படுகிறது. இங்கு, போராட்டங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
டெம்பிள் மவுன்ட்டின் வாயிலை அகலப்படுத்த முடிவு செய்திருப்பதாக, இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சர் கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதற்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இம்முடிவு ஒருதலைப்பட்சமானது எனத் தெரிவித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மேற்குக்கரை பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் மூன்று யூத இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தனர். அச்சம்பவத்துக்குப் பழிவாங்கும் விதத்தில், பாலஸ்தீன இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதற்குப் பிறகு அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
காஸா மீது இஸ்ரேல் 50 நாட்கள் ராணுவத் தாக்குதல் நடத்தியது. இதில், 2,100 பாலஸ்தீனர்களும், இஸ்ரேல் தரப்பில் 72 பேரும் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பதற்ற நிலை தொடர அனுமதிக்கக் கூடாது எனவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையையும் வலியுறுத்தியுள்ளார்.
கலாச்சார மையம் மீது தாக்குதல்
காஸாவிலுள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இத்தாக்குதல் நடைபெற்றது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அக்கட்டிடத்தில் யாரும் இல்லை. பிரான்ஸ் கலாச்சார மையத்திலுள்ள உணவு விடுதிக் கட்டிடடம் மட்டும் சேதமடைந்துள்ளது. இக்குண்டுவெடிப்பு குறித்து காஸா காவல்துறை விசாரித்து வருகிறது. பிரான்ஸ் கலாச்சார மையம், பிரெஞ்சு மொழி கற்பித்தல், உள்ளூர் மக்களின் விசா விண்ணப்பங்களை தூதரகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT