Last Updated : 20 Jan, 2016 09:46 AM

 

Published : 20 Jan 2016 09:46 AM
Last Updated : 20 Jan 2016 09:46 AM

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 8

காங்கோ முழுவதும் பயணம் செய்த ரோஜர் கேஸ்மென்ட் என்ற பிரிட்டிஷ் தூதர் கண்ட காட்சிகள் அதிர்ச்சிகரமானவை.

அங்கு காணப்பட்ட பல ஆண்களின் கைகள் வெட்டப்பட்டிருந்தன. விசாரித்தார். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு கண்ணீர்க் கதை. குறிப்பிட்ட அளவைவிட குறைவான அளவில் ரப்பர் கொண்டு வந்ததால் வெட்டப்பட்ட கைகள்.

அத்தனை மக்களின் மனதிலும் பய உணர்ச்சி அப்பி இருந்தது. ‘‘துப்பாக்கி குண்டுகளை வீணாக்கக் கூடாது. அவை போரின்போது பயன்படும். அதனால்தான் பெரிய வாள்களால் உங்கள் கைகளை வெட்டுகிறோம்’’ என்று ஆட்சியாளர்கள் கூறியதும் தெரியவந்தது.

இந்த அறிக்கை பிரிட்டனை அடைந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கோவுக்குச் சென்று வந்த கிறிஸ்தவ மத குருமார்கள் ஏன் இதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

சர்வதேச அளவில் பெல்ஜியத் துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

காங்கோவிலும் பெல்ஜியத்திலும் மன்னருக்கு எதிர்ப்பு அதிகமாகத் தொடங்கியது. 1908-ல் அவரை பெல்ஜிய அரசு பதவியிலிருந்து நீக்கியது. அதே வருடம் காங்கோ பகுதியை அதிகாரபூர்வ மாகவே பெல்ஜியம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அந்தப் பகுதியின் பெயரை ‘பெல்ஜியம் காங்கோ’ என்று மாற்றி அமைத் தது.

அதற்குப் பிறகு காங்கோ விவசாயிகளின் துயரம் ஓரளவு (மட்டும்) குறைந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கப் பகுதிகளை ஆக்கிர மித்த ஐரோப்பிய சக்திகளில் மன்னர் இரண்டாம் லியோபோல்டுக்குத் தனி இடம் கிடைத்தது மிகக் குரூரமாக ஆப்பிரிக்க மக்களை நடத்தியவர் என்ற அளவில்.

பிற ஐரோப்பிய நாடுகளின் காலனிகளுக்கும் காங்கோவுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமித்தவுடன் தனது கவர்னர் ஒருவரை ஐரோப்பிய நாடு அங்கு நியமிக்கும். மற்றபடி உள்ளூர் தலைவர் ஒருவர்தான் அதை ஆட்சி செய்வார். ஆனால் பிரெசல்ஸில் (பெல்ஜியத் தலைநகர்) இருந்து தான் காங்கோ ஆளப்பட்டது.

கத்தோலிக்க மதகுருமார்களின் நோக்கம் மதம் சார்ந்ததுதான் என்றாலும் அவர்களால் காங்கோ மக்களின் கல்வி அறிவு மேம்பட்டது என்பதையும் மறுக்க முடியாது.

போகப் போக காங்கோவில் ரப்பர் ஏற்றுமதி பல்வேறு காரணங் களால் குறையத் தொடங்கியது. புதிய வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தது பெல்ஜிய நிர்வாகம். காங்கோவில் தாமிரம் அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று அறியப்பட்டது. தாமிர இருப்பிடங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. சுரங்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டன, வெட்டப்பட்டன.

அதிக அளவில் தாமிரம் கிடைக்க 1928-ல் உலகின் மொத்த தாமிரத்தில் ஏழு சதவீத உற்பத்தி கொண்டது என்ற பெருமையை காங்கோ அடைந்தது. (பின்னர் அங்கு வைரம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு வைரச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. ஒரு கட்டத்தில் வைர உற்பத்தியில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்தது காங்கோ - முதலிடம் தென்னாப்ரிக்காவுக்கு).

இரண்டாம் உலகப் போரின் போது பெல்ஜியத்தை ஜெர்மன் ராணுவம் ஆக்கிரமித்ததைக் குறிப்பிட்டோம். அந்தக் காலகட் டத்தில் லண்டனிலிருந்து ஆட்சி செய்தது பெல்ஜிய அரசு. அப்போது கூட காங்கோ பெல்ஜிய அரசுடன் ஒத்துப் போனதைத் தவிர இதை ஒரு வாய்ப்பாகக் கருதி புரட்சியில் ஈடுபடவில்லை. எப்படியும் ஏதோ ஓர் ஐரோப்பிய சக்தியிடம் அடிமைகளாக இருப்பதுதான் நம் தலையெழுத்து என்ற எண்ணம் பல காங்கோவாசிகளிடம் இருந்தது.

போருக்குப் பிறகு வந்த காலகட்டத்தில் காங்கோவின் வளம் சிறப்படைந்தது. பெல்ஜியத்தி லிருந்து இங்கு வந்து குடியேறுபவர் களின் எண்ணிக்கை அதிகமானது. போரின் முடிவில் 34000 ஆக இருந்த வெள்ளையர்களின் (பெல்ஜியக் காரர்களின்) எண்ணிக்கை, 1958-ல் (சுமார் 13 வருடங்களில்) 1,13,000 ஆக அதிகரித்தது.

ஆப்பிரிக்கக் காலனிகள் அனைத்தும் சந்தித்த அதே பிரச்சினைகளை காங்கோவின் மண்ணின் மைந்தர்களும் சந்தித் தனர். காங்கோவில் வெள்ளையர் களுக்கான வாழ்க்கைத்தரம் கறுப்பர்களைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. வேலை வாய்ப்புகளும் வெள்ளையர் களுக்குதான் அதிகம் வழங்கப் பட்டன.

ஆனால் பிற ஆப்பிரிக்க காலனிகளிடமிருந்து ஒருவிதத்தில் மேலும் வேறுபட்டது. காங்கோவில் எந்தவொரு அரசியலமைப்பும் துளிர்விடவில்லை. சொல்லப் போனால் 1957 வரை காங்கோ வில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. அதாவது வெள்ளை யர்கள், கறுப்பர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே வாக்குரிமை இல்லை. காரணம் அவர்களது பிரதிநிதியாக எந்த அமைப்புமே விளங்கவில்லை. பிறகு எப்படி தேர்தலும் வாக்குரிமையும் முளைக் கும்?

ஆனால் 1950-க்களில் ஆப்பிரிக்க கண்டம் முழுவதிலுமே சுதந்திரம் கோரும் குரல்கள் பலமாகவே ஒலித்தன. ஒருவழியாக காங்கோவிலும் அதுபோன்ற குரல்கள் கேட்கத் தொடங்கின. உள்ளூர் இனத்தைச் சேர்ந்த பாட்ரிஸ் லுமும்பா என்பவர் உரிமைக்குரல் எழுப்பினார். அவர் குரலுக்கு வலிமை இருந்தது. மக்கள் அவர் பின் திரண்டார்கள். 1958-ல் அவர் காங்கோவின் முதல் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அது MNC என்று அழைக்கப்பட்டது. (இதன் பொருள் தேசிய இயக்க காங்கிரஸ் என்பதாகும்).

இந்தக் கட்சி ஜனவரி 1959ல் ஒரு பிரம்மாண்டமான அரசியல் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அதற்கு பெல்ஜிய அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்தது. ஏற்கெனவே தாங்கள் சரியாக நடத்தப்படாததால் கொதித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் கலவரங்களில் ஈடுபட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. கடைகள் சூறை யாடப்பட்டன. ஐரோப்பியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு காவல்துறை ஏவி விடப்பட, பல ஆப்பிரிக்கர்களும் கொலை செய்யப்பட்டனர்.

இதைக் கண்டு பெல்ஜியம் அதிர்ச்சி அடைந்தது. அப்போது அதன் மன்னராக இருந்தவர் பாடோவின். இவர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அறிவித்திருந் தார். உரிய காலகட்டத்தில் காங் கோவுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கும் எண்ணம் பெல்ஜியத் துக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

காங்கோவில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேசிய அளவில் தேர்தலில் நிற்கக்கூடிய அரசியல் கட்சியாக லுமும்பாவின் MNC கட்சி மட்டுமே இருந்தது.

‘‘நான்கு வருடங்களில் உங்களுக்குச் சுதந்திரம் அளித்து விடுவோம்’’ என்றது பெல்ஜியம். காங்கோ பிரதிநிதிகள் இதற்குத் தீவிரமாக மறுப்புக் கூறினார்கள். ‘‘மிகச் சீக்கிரமே சுதந்திரம் அளித்து விடுகிறோம்’’ என்று வாக்குறுதி அளித்தது பெல்ஜியம். என்றாலும் அடுத்த 6 மாதங்களிலேயே அந்தச் சுதந்திரம்

கிடைத்துவிடுமென்று காங்கோ வாசிகள் கூட எதிர்பார்க்கவில்லை. 1960 ஜூன் 30 அன்று பெல்ஜியம்-காங்கோ சுதந்திரம் பெற்றது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x