Published : 27 Oct 2014 05:37 PM
Last Updated : 27 Oct 2014 05:37 PM
பிரிட்டனில் உள்ள பாகிஸ்தானியர்கள், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட பேரணியால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
'மில்லியன் மார்ச்' என்று அழைக்கப்படும் இந்தப் பேரணி லண்டனில் உள்ள டிரபல்கர் சதுக்கத்திலிருந்து, ட்ரவ்னிங் தெரு வரை நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி திடீரென மேடை அமைத்துப் பேசத் தொடங்கிய போது குழப்பம் தொடங்கியது.
ஆனால் அவரைப் பேச விடாமல் அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களே, பூட்டோ மீது காலி பாட்டில்களை விட்டெறியத் தொடங்கினர்.
இந்தச் சர்ச்சையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரி-கி-இன்சாஃப் கட்சியின் ஹசன் நியாஸி (இம்ரான் உறவினர்) என்பவரும் சிக்கினார்.
இதனையடுத்து நியாஸியை பிரிட்டன் போலீஸ் சிறிது நேரத்திற்குக் கைது செய்தனர்.
இந்தப் பேரணியின் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் நகரில் இம்ரான் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிலாவலை பேச விடாமல் செய்ததால் தனது அலுவலகத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் தாக்கியதாக இம்ரான் கான் பிற்பாடு தெரிவித்தார்.
இது குறித்து இங்கிலாந்தில் டெர்பியிலிருந்து கிழக்கு மிட்லேண்ட் வரையில் பயணம் செய்து பேரணியில் கலந்து கொண்ட ஆர்பாட்டக்க்காரர்கள் சிலர் கூறும் போது, “இந்தப் பேரணி காஷ்மீர் மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது. இதில் பிலாவலுக்கு என்ன வேலை?” என்று கூறியுள்ளனர். ஆனால் பிலாவல் சகோதரி கூறும்போது, “பிலாவலைப் பேசவிடாமல் செய்தது இந்தியர்கள்” என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தப் பேரணியைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ரெஹ்மான் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய-பிரிட்டன் நட்புறவுக்கு களங்கம் விளைவிக்கும் குழுக்கள் இத்தகைய பேரணிகளை நடத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT