Published : 04 Feb 2017 04:12 PM
Last Updated : 04 Feb 2017 04:12 PM
அகதிகள் மற்றும் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடை ஆணையை அமெரிக்கா முழுவதும் தற்காலிகமாகத் தடை செய்வதாக அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சீட்டல் மாகாண நீதிபதி, ஜேம்ஸ் ராபர்ட் என்பவர்தான் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிரான இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
டிரம்பின் தடை ஆணைக்கு சவால் விடுப்பதற்கு வாஷிங்டன், மினஸ்சோடா போன்ற மாகாணங்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், ட்ரம்புக்கு எதிரான இத்தகைய உத்தரவை ஜேம்ஸ் பிறப்பித்துள்ளார்.
ட்ரம்ப்பின் உத்தரவுப் படி, சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது.
மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, பலர் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த நடவடிக்கை நாட்டை பாதுகாக்கும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன் மாகாணம் முதலில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த மாகாண நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் கூறும்போது, "மாகாணங்கள் உடனடியாக சீர்படுத்த முடியாத சுமைக்கு உள்ளாகியுள்ளன. நீங்கள் (அரசு தரப்பு வழக்கறிஞர்) அமெரிக்கா முழுவதும் நடைபெறும் அரசாங்க நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை பார்க்கிறீர்கள் அல்லவா? இந்தத் தடை உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரான தடையாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது" என்றார்.
ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள தடை உத்தரவால்,அமெரிக்காவுக்கு வர விண்ணப்பித்திருந்த 60,000 பேரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT