Last Updated : 15 Jun, 2016 10:24 AM

 

Published : 15 Jun 2016 10:24 AM
Last Updated : 15 Jun 2016 10:24 AM

பிரான்ஸில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல்: மூத்த போலீஸ் அதிகாரி, மனைவி படுகொலை- சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு

பிரான்ஸ் போலீஸ் அதிகாரி, அவரது மனைவியை ஐ.எஸ். தீவிரவாதி கொடூரமாக கொலை செய்து சமூகவலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தான். இந்தச் சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர ஐரோப்பிய நாடுகளும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

இதைத்தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தற்போது குழுவாக தாக்கும் வியூகத்தை கைவிட்டு அண்மைகாலமாக தனிநபர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 12-ம் தேதி அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் தன்பாலின கேளிக்கை விடுதியில் ஐ.எஸ். தீவிரவாதி ஒமர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

அதேபோன்ற தனிநபர் தாக்குதலை பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நேற்று நடத்தியது.

தலைநகர் பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள மேக்னான்வில்லேவில் பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் ஐ.எஸ். தீவிரவாதி புகுந்தான். அப்போது வீட்டில் போலீஸ் அதிகாரி, அவரது மனைவி, 3 வயது குழந்தை இருந்தனர். மனைவியும் போலீஸ் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மூவரையும் ஐ.எஸ். தீவிரவாதி சிறைபிடித்தான். தகவல் அறிந்து அதிவிரைவுப் படை போலீஸார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். ஆனால் அதற்குள் போலீஸ் அதிகாரியையும் அவரது மனைவியையும் தீவிரவாதி கத்தியால் குத்தி கொலை செய்தான். பின்னர் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஐ.எஸ். தீவிரவாதி சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தான். போலீஸ் அதிகாரி, மனைவியை கொலை செய்த பிறகு 3 வயது குழந்தையை காட்டி ‘இந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளான்.

அவன் மேலும் கூறியபோது, ரமலான் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி உத்தரவிட்டுள்ளார். எங்களது தாக்குதல் தொடரும் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

தாக்குதல் சம்பவம் குறித்து பிரான்ஸ் போலீஸார் கூறியதாவது: உயிரிழந்த போலீஸ் அதிகாரி, அவரது மனைவி லெஸ் முரேக்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாரீஸ் புறநகர் பகுதியைச் சேர்ந்த லரோஸ்ஸி அப்பாலா (25) என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித் ததால் ஏற்கெனவே 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றவன்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே ஐஎஸ்ஸுடன் தொடர்புடைய அமாக் செய்தி நிறுவனம் போலீஸ் தம்பதியை கொலை செய்தது ஐஎஸ் தீவிரவாதி தான் என தகவல் வெளியிட்டுள்ளது.

அதிபர் கண்டனம்

பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே இது மிகுந்த இழிவான செயல் என கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். மேலும் பாதுகாப் பை பலப்படுத்தும்படி உத்தரவிட்டு ள்ளார். இதையடுத்து காவல்துறை தம்பதியின் வீடு அருகே வசித்து வந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில் நிகழ்ந்த இந்த தீவிரவாத சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x