Published : 20 Jul 2016 04:54 PM
Last Updated : 20 Jul 2016 04:54 PM
வங்கதேசத்தில் நாடு முழுவதும் 261 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு படை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, காணாமல் போனவர்களில் பட்டியலை ஃபேஸ்புக் தளத்தில் வங்கதேச அரசு அதிகாரபூர்வமாக பதிவிட்டு, மாயமானவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் அரசாங்கத்திடம் தகவல் அளிக்குமாறு கூறியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த ஐ.எஸ். தீவிரவாத தாக்குதலை அடுத்து பலர் காணாமல் போயுள்ளனர்.
டாக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு 20 பேர் பலியாகினர். அதில் 18 பேர் வெளிநாட்டு பயணிகள். இத்தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் தாங்கள்தான் நடத்தினோம் என்று பொறுப்பேற்று கொண்டது.
இதனைத் தொடர்ந்து வங்க தேசத்தின் வடக்கு பகுதியில் ரம்ஜான் புனித நாளின்போது தொழுகையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலை துப்பாக்கி ஏந்திய இருவர் மேற்கொண்டனர். அவர்கள் இருவருமே சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் என போலீஸ் மற்றும் பெற்றோர் தரப்பில் தேடப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது 261 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து துரித நடவடிக்கை படையின் தலைமை அதிகாரி பெனாசிர் அஹமது கூறும்போது, "உங்கள் குடும்பத்தில் எவரேனும் காணாமல் போயிருந்தால் உடனடியாக எங்களிடம் தெரியப்படுத்துங்கள். சட்ட நடவடிக்கைகள் உங்கள் மகனை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்று பயப்பட வேண்டாம். அவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களது உயிர் காப்பாற்றப்படும்”என்றார்.
இதனிடையே மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் உயர்மட்ட பல்கலைகழகங்களில் பயின்ற மாணவர்கள் பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்துவிட்டதாக உள்ளுர் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணமல் போனவர்களை பற்றி தகவல் அளிக்குமாறு வங்கதேச அரசு அறிவித்ததை அடுத்து, பொறியியல் மாணவரான நஜிபுல்லா அன்சாரியை கடந்த ஒரு வருடமாக காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அன்சாரி கடைசியாக தனது தம்பியிடம் ஃபேஸ்புக் வாயிலாக தொடர்புகொண்டு, “நான் ஈராக் வந்துவிட்டேன். அப்பா, அம்மாவிடம் என்னை பற்றி கவலையடைய வேண்டாம் என்று சொல். நான் இங்கு புனிதப் போருக்காக வந்திருக்கிறேன். இனி, நான் திரும்பி வர மாட்டேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது தொடர்பான செய்தி வங்கதேசத்தின் உள்ளூர் நாளிதழான டாக்கா ட்ரிப்யூனில் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT