Published : 18 Nov 2013 10:38 AM
Last Updated : 18 Nov 2013 10:38 AM

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்ற மேலும் ரூ.21 கோடி நிதி உதவி பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் அறிவிப்பு

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து கண்ணி வெடிகளையும் எஞ்சியுள்ள வெடிபொருள்களையும் அகற்ற மேலும் 21 லட்சம் பவுண்டு (21 கோடி ரூபாய்) நிதி உதவி வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட் புறப்பட்டார்.

முன்னதாக, இலங்கை பயணம் நிறைவடைந்ததையொட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இலங்கையின் வடக்கே உள்ள சில பகுதிகளில் கண்ணிவெடி பிரச்சினை தொடர்கிறது. இவற்றை அகற்றும் நோக்கத்தில் அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளதால் எதற்கும் உதவாமல் ஆபத்து மிக்கதாக இருக்கும் நிலங்களிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றி உள்ளூர் மக்களிடம் அந்த நிலங்கள் ஒப்படைக்கப்படும். அந்த நிலத்தை வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளிகள், சாலைகளை அமைத்துக்கொள்ளலாம். இறுதிக்கட்டப் போருக்குப் பின் பிரிந்து கிடப்போர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஆதரவாக இந்த நிதி உதவி தரப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாக பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ ஆவணப் படம் காட்டும் இதயத்தை உறைய வைக்கும் கொடூர போர்க்குற்றம், மனித உரிமை மீறல் சம்பவங்கள் இந்த பகுதிகளில் நடந்துள்ளவை..

இனப்போரின்போது இந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. இவற்றை அகற்றுவது சிக்கல் மிக்க பணி. ஒரு ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்திலிருந்து இந்த நிதி உதவி மூலம் கண்ணிவெடிகளை அகற்றலாம். யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து முழுமையாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஓரளவு முழுமையாகவும் இந்த நிதி உதவி மூலம் கண்ணிவெடிகளை அகற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்த நிதி உதவி, வடக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவும் பயன்படுத்தப்படும்.

உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த சுமார் 70000 பேரை மறு குடியமர்த்த ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசாங்கம் அறக்கட்டளை ஒன்றின் மூலம் 30 லட்சம் பவுண்டு நிதி உதவி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x