Published : 07 Mar 2014 12:03 PM
Last Updated : 07 Mar 2014 12:03 PM
வங்கிகளின் கடன் உருவாக்கும் திறனைக் கட்டுப்படுத்துவது மத்திய வங்கியின் (ரிசர்வ் வங்கி) வேலை. இதனைக் கடன் கட்டுப்பாடு (credit control) என்பர். பொதுவாக வங்கிகள் வைப்புத்தொகை பெறும்போதெல்லாம் அதனில் ஒரு பகுதியைப் பணமாக மத்திய வங்கியிடம் வைக்கவேண்டும் என்பது ஒரு விதக் கட்டுப்பாடு.
அதேபோல் வைப்பு தொகையின் ஒரு பகுதியை அரசு கடன் பத்திரங்களிலோ அல்லது மத்திய வங்கி குறிப்பிடும் ரிஸ்க் இல்லாத வேறு கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்யவேண்டும் என்பதும் வேறு விதக் கட்டுப்பாடு. இவ்வாறு செய்வதன் மூலமாக வங்கிகள் கடன் உருவாக்குவதைக் கட்டுபடுத்த முடியும்.
உதாரணமாக வைப்பு தொகையில் 5% பணமாகவும், 20% அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இருப்பு விகிதம் என்ற பொது வார்த்தையில் குறிப்பிடலாம். ஆக, ஒவ்வொரு ரூ100 வைப்புத்தொகைக்கும் வங்கிகள் ரூ75 தான் கடன் கொடுக்கமுடியும். இவ்வாறு கடன் உருவாக்கத்தை இருப்பு விகிதம் கட்டுப்படுத்தும்.
கடன் உருவாக்கும் விகிதம் (Credit Multiplier)
ஒரு வங்கியின் துவக்க ரொக்கம் ரூ100 என்று வைத்துக்கொள்வோம். இதிலிருந்து எவ்வளவு கடன் உருவாக்கமுடியும் என்பது கேள்வி. மத்திய வங்கி 20% இருப்பு விகிதம் வைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். வங்கியும் தனது வைப்பு பணத்தில் 5% ரொக்கமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறது. கடன் ஏற்படுத்தும் விகிதத்தை (Credit Multiplier) கொண்டு எவ்வளவு கடன் உருவாக்க முடியும் என்பதைக் கணக்கிட முடியும்.
கடன் உருவாக்கும் விகிதம் = 1/ (இருப்பு விகிதம் + வங்கியின் ரொக்க விகிதம்).
மேலே உள்ள உதாரணத்தில் கடன் உருவாக்கும் விகிதம் =1/ (0.20+0.05) = 1/0.25 = 4.ஆக, ரூ 100 வைத்துக்கொண்டு, வங்கியினால் ரூ400 கடன் உருவாக்க முடியும்.
இருப்பு விகிதம், ரொக்க விகிதம் அதிகரிக்கும்போது கடன் உருவாக்கும் விகிதம் குறையும். இவை இரண்டும் சேர்ந்து 50% என்றால், கடன் உருவாக்கும் விகிதம் 1/0.5 = 2.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT