Last Updated : 20 Jun, 2015 08:24 PM

 

Published : 20 Jun 2015 08:24 PM
Last Updated : 20 Jun 2015 08:24 PM

நரேந்திர மோடி யோகா செய்கிறாரா? ரஷ்ய அதிபர் புதின் ஆச்சரியம்

"இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்கிறாரா? யோகாவுக்கென்று தனி அமைச்சகம் இருக்கிறதா?" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்தியாளரிடம் ஆச்சரியமாக கேட்டறிந்தார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பின்’ மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டின் இறுதி நாளான நேற்று இரவு 12 நாடுகளின் செய்தியாளர்களுக்கு அதிபர் புதின் பேட்டி அளித்தார். அப்போது, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகாவுக்கென்று தனி அமைச்சகம் ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று செய்தியாளர் ஒருவர் புதினிடம் தெரிவித்தார்.

அதை கேட்டு ஆச்சரியம் அடைந்த புதின், ‘யோகாவுக்கு தனி அமைச்சகமா? மோடி யோகா செய்கிறாரா?’ என்று வியந்தார். (இந்தியாவில் ஆயுஷ் (Ayush) என்ற பெயரில் தனி அமைச்சகத்தை சமீபத்தில் நரேந்திர மோடி உருவாக்கினார். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய பழங்கால இயற்கை மருத்துவ முறைகளால் நோய்களை குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான அமைச்சகம் இது).

பின்னர் மோடியைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அவர் நல்ல மனிதர், எனக்கு சிறந்த நண்பர்’ என்று புதின் பதில் அளித்தார். ‘நீங்களும் மோடியும் கடுமையான அரசியல் தலைவர்கள் என்று கூறுகிறார்களே?’ என்று கேட்டதற்கு, ‘நான் முரட்டுத்தனமானவன் இல்லை. நான் எப்போதும் விட்டுக்கொடுத்து செல்ல விரும்புவேன். ஆனால், பல நேரங்களில் எதிர் தரப்பில் இருப்பவர்கள்தான் கடினமான நிலையை எடுக்கின்றனர்’ என்று புதின் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘நான் செய்வது சரியல்ல. அவர்கள் செய்வது சரி’ என்ற 2 கருத்துகளை எதிர் தரப்பில் இருப்பவர்கள் வைத்துள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x