Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடை

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவது தொடர்பாக 6 மாதங்கள் வரை காத்திருக்குமாறும், அதற்குள்ளாக பேச்சுகளின் மூலமும் ராஜ்ஜிய நடவடிக்கைகளின் அடிப்படையிலும் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பேச்சு நடத்தவுள்ள நிலையில், ஒபாமா தெரிவித்துள்ள இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஒபாமா கூறியதாவது: ஈரான் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படும் முடிவை அறிந்து கொள்ள அடுத்த 6 மாதங்கள் காத்திருக்குமாறு இஸ்ரேல், ஈரான், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் சி.இ.ஓ. கவுன்சில் ஆணடுக் கூட்டத்தில் பேசும்போது ஒபாமா இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்துவிடாமல் செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் கையாள்வோம். இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஈரானுக்கு உள்ள உறுதியை அறிந்து கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிப்பதில் தவறில்லை. இந்த வாரத்துக்குள்ளோ அல்லது அடுத்த வாரத்துக்குள்ளோ உடன்பாடு ஏற்படும் என்று கருதவில்லை. எனினும், இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து இருக்கும். அணு ஆயுதத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் வகையில் இந்த பொருளாதாரத் தடைகள் இருக்கும்” என்றார்.

ஈரானுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜெனீவாவில் பேச்சு நடத்தவுள்ள சூழ்நிலையில் ஒபாமாவின் கருத்து வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x