Published : 30 Jan 2017 01:19 PM
Last Updated : 30 Jan 2017 01:19 PM
சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது என்று இந்தோனேசியா கருத்து தெரிவித்துள்ளது.
சிரியா அகதிகள் நுழைய நிரந்தரத் தடையும், ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதித்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தடை உத்தரவு குறித்து இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் அர்மனந்தா நாசீர் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது,"ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை அந்த நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது.
இந்த தடையில் இந்தோனேசியா நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது. இம்முடிவு உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் எதிர்மறையான விளைவை உண்டாக்கும்" என்றார்.
இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்காவில் உள்ள தங்களது குடிமக்களுக்கு உரிமைகள் மற்றும் உள்ளூர் சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் இந்த முடிவால் இந்தோனேசியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்றும் அந்நாடு கண்காணித்து வருகிறது.
உலக அளவில் முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்க அதிபராக பதிவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை குடியுரிமைக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT