Published : 28 Sep 2018 08:45 PM
Last Updated : 28 Sep 2018 08:45 PM
இந்தோனேசியாவின் மத்தியப்பகுதியில் இன்று ஏற்பட்ட மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தால், சுலாவசி தீவை சுனாமி தாக்கியது.ஏறக்குறைய 2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி வந்து கட்டிடங்களைத் தாக்கின. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சாலைகளில் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.
இந்தோனேசியாவின் சுலாவசி தீவில் இன்று உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, பூகம்பம் ஏற்பட்டவுடன் கட்டிடங்கள் குலுங்கின, கடைகளில் இருந்த பொருட்கள், வீடுகளில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்ததால், மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சாலைக்கு ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கம் சுலாவசியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானது என்று அமெரிக்க பூகோளவியல் துறை தெரிவித்தது.
இந்தப் பூகம்பத்தால், சுலாவசி மாநிலத்தின் தலைநகரான பலு நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டவுடன் சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், நகரில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிலஅதிர்வு ரிக்டர் அளவில் அதிகமாக இருந்ததால், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், மக்கள் சாலை ஓரத்திலேயே தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் ஓடத் தொடங்கினார்கள்.
சுனாமி அறிவிப்பு விடுக்கப்பட்ட சில மணிநேரத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. ஏறக்குறைய 2 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக அலைகள் எழும்பி வந்து கரைஓரத்தில் இருந்த கட்டிடங்களைத் தாக்கின என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்டுபோ புர்வோ நுக்ரோகோ கூறுகையில், நிலநடுக்கத்தில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன, ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. எத்தனைப் பேர் இறந்துள்ளனர், கட்டிடங்கள் சேதம் குறித்து இப்போது சொல்ல முடியாது. மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.
முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் மக்கள் அனைவரும் மாலைநேர தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது.
இன்று பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதி என்பது பலு நகரத்தில் இருந்து 78 கி.மீ தொலைவில் மையம் கொண்டு தாக்கியது. இந்தப் பூகம்பம் மத்திய சுலாவசி முதல் மகாசார் நகரம், காளிமந்தன் தீவு, போமியோ தீவு ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இந்தப் பூகம்பத்தில் தற்போதுவரை ஒருவர் மட்டும் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் புவியியல் அமைப்பான பிஎம்கேஜியின் தலைவர் விகோரிடா கர்ணாவதி கூறுகையில், பலுநகரின் பல்வேறு கடற்பகுதிகளை சுனாமி அலை தாக்கியது. ஏறக்குறைய அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு வந்துள்ளன.
மக்கள் சுனாமி அலையைப் பார்த்ததும் உயிரைக் காப்பாற்றக்கொள்ள ஓடுவதைக் காண முடிந்தது. வீதிகளில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. ஒரு கப்பல் சுனாமி அலையில் அடித்து கரையில் தள்ளப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சுனாமி எச்சரிக்கை தரப்பட்டது. பின்னர் ஒருமணிநேரத்தில் விலக்கப்பட்டது. ஆனால், இருந்து சுனாமி அலைகள் தாக்கியுள்ளன எனத் தெரிவித்தார்.
பலுநகரில் ஏற்பட்ட பொருட் சேதங்கள், உயிர்ச் சேதங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT