Published : 30 Sep 2018 01:23 AM
Last Updated : 30 Sep 2018 01:23 AM
ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் பிரதமர் ஷின்சோ அபே. இதன்மூலம் ஜப்பானில் அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். ஆனால், எதிர்காலம் இதேபோல் இருக்காது என்பதையும் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் அபே அறிவார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இருந்தாலும் உள்நாட்டிலும் சுற்றியுள்ள அண்டை நாடுகளிலும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை அபே கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அது, எந்தக் காலத்திலும் போரில் ஈடுபடுவது இல்லை என்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கு ஆயுதம் மூலம் தீர்வு காண்பதில்லை என்றும் வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவு 9-ஐ திருத்துவது ஆகும். புதிய ஜப்பானை உருவாக்க விரும்புவதாகக் கூறும் அபே, அதற்கான திட்டங்களை ரகசியமாக வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில், ஜப்பான் எதிர்காலத்தில் போரை பற்றி நினைக்கவே கூடாது என்பதற்காக எதிரி நாடுகள் செய்த சதிதான் ஜப்பானின் அரசியல் சட்டப் பிரிவு 9 என ஜப்பானின் தேசியவாதிகள் நினைக்கிறார்கள்.
அபே, அரசியல் சட்டத்தை திருத்தப் போவதும் ஜப்பானின் தற்காப்பு படைகளின் நிலையை மாற்றப் போவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதை எப்படி செய்யப் போகிறார் என்பதுதான் ரகசியம். சட்டப் பிரிவு 9-ஐ திருத்தி, ஜப்பான் படைகளுக்கு சட்ட அங்கீகாரத்தை அளிப்பது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தும். கடந்த 1980 முதல் ஜப்பான் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதால், உள்நாட்டில் பெரிதாக எதிர்ப்பு இருக்காது. ஆனால் கடந்த காலத்தில் ஜப்பான் ராணுவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளான சீனா, வட கொரியா, தென் கொரியா நாடுகளில் அதிருப்தி ஏற்படும். ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அபேவுக்கு போதுமான பலம் இருந்தாலும் சட்டத் திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஜப்பான் கடலில் வட கொரியா ஏவிய ஏவுகணைகள் விழுந்தது எல்லாம் பிரதமர் அபேயின் மிகப் பெரிய கவலை இல்லை. வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள்தான் பெரும் கவலையாக மாறியுள்ளது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கையால், அடுத்தது நம் மீதுதான் நடவடிக்கை பாயும் என ஜப்பான் அச்சத்தில் இருக்கிறது. ஜப்பானுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 6,900 கோடி டாலராக இருக்கிறது. இதனால் ஜப்பானின் வாகனங்கள் மீது வரியை அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகளை ஜப்பான் வாங்கினாலும் இது ஒரே ஒரு முறை நிகழும் வர்த்தகம் என்பதால், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என அமெரிக்கா நினைக்கிறது. சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 37,500 கோடி டாலர்கள். இதை ஒப்பிடும்போது ஜப்பானுடனான வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் குறைவுதான். ஆனால், நட்பு நாடுகளுடன் வர்த்தகப் போர் ஏற்பட்டாலும், எந்த விதத்திலும் வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. உலக வர்த்தகத்தில் ஏறக்குறைய 80,000 கோடி டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா சந்தித்து வருகிறது. இதை சரிக்கட்ட சமீப காலமாக சீனப் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறது. அதேபோல், மொத்த இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் ஜப்பானின் வாகன இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
ஜப்பானின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டுக்கு 40 லட்சம் வாகனங்களை அமெரிக்காவில் விற்பனை செய்து வருகின்றன. புதிதாக விதிக்கப்படும் வரிகள், நுகர்வோர் மீது சுமையாக மாறும் என்பதாலும் ஜப்பானின் ஜிடிபி பாதிக்கும் என்பதாலும் ஜப்பான் கவலையில் ஆழ்ந்துள்ளது. கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக ஜப்பான் இருந்தாலும், பாதுகாப்பு கூட்டாளிகள் என்பதாலேயே, எந்த நாட்டுக்கும் சலுகை கொடுக்க முடியாது என்பதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார்.
- ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர். வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்ஷின்சோ அபே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT