Last Updated : 03 Sep, 2018 03:59 PM

 

Published : 03 Sep 2018 03:59 PM
Last Updated : 03 Sep 2018 03:59 PM

ஹாலிவுட் நடிகை சுட்டுக் கொலை: துப்பாக்கியுடன் மிரட்டியதால் போலீஸார் அதிரடி

அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகை வனேஸா மார்கியு துப்பாக்கியை வைத்து மிரட்டியதால், வேறுவழியின்றி தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில் நடிகை கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சவுத் பாஸதேனா நகரில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகை வனேஸா மார்க்கியு. இவர் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் இஆர் எனும் தொடரில் நடித்துப் புகழ்பெற்றவர், தற்போது திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபகாலமாக வனேஸா மார்க்யூ ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வனேஸா மார்க்யூ மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த வீட்டின் உரிமையாளர் போலீஸாருக்கும், மருத்துவக்குழுவுக்கும் தகவல் அளித்தார்.

அவர்கள் விரைந்து வந்து மார்க்யூவிடம் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கவுன்ஸ்லிங் அளித்தனர். ஆனால், மருத்துவக் குழுவையும், போலீஸாரையும் நெருங்கவிடாமல் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார் மார்க்யூ.

இதனால், வேறுவழியின்றி தற்காப்புக்காக மார்க்யூவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ஆனால், அதன்பின்புதான் மார்க்யூ கையில் இருந்தது பொம்பை துப்பாக்கி என்று போலீஸாருக்கு தெரிந்தது. இதையடுத்து உடனடியாக மார்க்யூவை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்யூவின் தோழி டெரன்ஸ் டோவல்ஸ் கூறுகையில், நடிகை மார்க்யூ கடந்த சில மாதங்களாகவே மனஉளைச்சல், பணப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துவந்தார். ஆனால், ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் காணப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் துப்பாக்கியை எடுத்து மற்றவர்களை மிரட்டும் அளவுக்கு துணிச்சலானவர் இல்லை. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

நடிகை மார்க்யூ சீவர் லெட்டர்ஸ், கியூபன் எம்பஸி ஆகியோ தொடர்களிலும், பிளட் இன் பிளட் அவுட், ட்வென்டி பக்ஸ் உள்ளிட்ட  பல்வேறு ஹாலிவுட்  படங்களிலும் நடித்துள்ளார். மேலும் புகழ்பெற்ற தொடரான இஆர், வெண்டி கோல்மென், ஸ்டான்ட் அன்ட் டெலிவர் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x