Last Updated : 19 Sep, 2018 01:42 PM

 

Published : 19 Sep 2018 01:42 PM
Last Updated : 19 Sep 2018 01:42 PM

‘ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி’ வைத்தால் 15 ஆண்டு சிறை; தீவிரவாதச் செயல்: ஆஸி.பிரதமர் ஆவேசம்

ஸ்ட்ராபெரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல். இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் ஸ்ட்ராபெரி பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசியை நுழைத்து மறைத்துவிடுவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

ஸ்ட்ராபெரி பழங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிச் சென்று சாப்பிட்ட 3-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், பலர் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் போது, அதில் ஊசி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஃபேஸ்புக்கிலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தனர்.

சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையான ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து தரமான ஸ்ட்ராபெரி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்காலிகமாகத் தடைவிதித்து நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி வைக்கும் விவகாரம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று நிருபர்களிடம் சிட்னியில் அளித்த பேட்டியில் கூறுகையில், ''மக்கள் சாப்பிடும் ஸ்ட்ராபெரி பழங்களில் மெல்லிய ஊசியை மறைத்து வைக்கும் செயல் தீவிரவாதத்தின் ஒரு பகுதி. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பழங்களில் ஊசி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதுபோன்று இதற்கு முன் நடந்தது இல்லை. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் கோழைகள். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும்.

விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வழி செய்வோம். இந்தச் செயலால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி பழங்கள் பறிப்பதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்''  என்று தெரிவித்தார்.

இருப்பினும் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் முன் மக்கள் அதை வெட்டிச் சோதித்த பின் சாப்பிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x