Published : 18 Sep 2018 09:52 PM
Last Updated : 18 Sep 2018 09:52 PM
சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.
மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும்.
நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்து இருந்தது.
மணிக்குச் சராசரியாக 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 140கி.மீவேகத்திலும் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
எப்படி ரயில் இயங்குகிறது?
உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைடர்ஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரி, செல்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி போன்ற லித்தியம் பேட்டரி இருக்கும்.
இந்த பேட்டரியில் எரிபொருள் செல்கள் நிரப்பப்பட்டுஇருக்கும். ரயில்கள் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியியல் மாற்றத்தின் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கரியமில வாயு உருவாகாது.
இந்த ரயிலுக்கு "கொராடியா ஐலின்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியும். ஹைட்ரஜன் மூலம் அதிகமான எரிசக்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில்எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும்.
இந்த ரயில் விரைவில் இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளிலும் சோதனை ஓட்டத்துக்குச் செல்ல இருக்கிறது. இந்த ரயிலை சாதாரண தண்டவாளங்களில் இயக்க முடியும்.
இதுகுறித்து அல்ஸ்டாம் நிறுவனத்தின் சிஇஓ ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலகளவில் இந்த ரயில் பெரும் புரட்சியை செய்ய இருக்கிறது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT