Published : 08 Jun 2019 12:59 PM
Last Updated : 08 Jun 2019 12:59 PM
உலகளவில் 5-ல் ஒரு சிறுவர் 15 வயதுக்கு முன்னதாகவே திருமண பந்தத்துக்குள் தள்ளப்படுவதாக யுனிசெஃப் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 11.5 கோடி ஆண்பிள்ளைகள் குழந்தைத் திருமணத்துக்கு ஆளாகின்றனர். அதுவும் சுமார் 23 மில்லியன் ஆண் பிள்ளைகள் அதாவது 5-ல் ஒரு சிறுவர் 15 வயதுக்கு முன்னதாகவே திருமண பந்தத்துக்குள் தள்ளப்படும் சூழல் இருக்கிறது என யுனிசெஃப் அறிக்கையில் உள்ளது.
இதற்காக 82 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் கிட்டியுள்ளது.
ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவு, தெற்காசியா, கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் ஆண் குழந்தைத் திருமண முறை அதிகளவில் அமலில் இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
இது தொடர்பாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா ஃபோர் கூறும்போது, "குழந்தைத் திருமணமென்பது பால்ய பருவத்தைத் திருடிவிடுகிறது. குழந்தைத் திருமணம் அந்தக் குழந்தையின் மீது வயது வந்த நபருக்கான பொறுப்பை சுமத்துகிறது. அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடிய வயதில் அவர்கள் இல்லாத சூழலில் அது அவர்களுக்கு சுமையாகிறது.
அதேபோல் இளம் வயதிலேயே தந்தையாவதால் சிறுவர்கள் குடும்பத் தேவையை கவனிக்கும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது. நல்ல வேலைவாய்ப்புகள் நழுவிப்போகின்றன" என்றார்.
யுனிசெஃப் ஆய்வறிக்கையின்படி மத்திய ஆப்பிரிக்காவில்தான் ஆண் பிள்ளைகள் குழந்தைத் திருமணம் அதிகளவில் அதாவது 28% நடைபெறுகிறதாம். அதற்கு அடுத்ததாக நிகாராகுவாவில் 19% மடகாஸ்கரில் 13% என்றளவில் ஆண் பிள்ளைகளின் குழந்தைத் திருமணம் நிகழ்கிறது.
இந்த புதிய புள்ளிவிவரத்தின்படி, குழந்தைத் திருமணத்தில் தள்ளப்படும் சிறார், சிறுமியினரின் எண்ணிக்கை 765 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதுவும் பெண் பிள்ளைகள் கூடுதலாக பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு ஓர் ஒப்பீட்டையும் யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.
அதாவது, 20 முதல் 24 வயதிலிருக்கும் பெண்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் அவர்களில் 5-ல் ஒருவர் 18 வயதுக்கு முன் திருமணமானவர் எனத் தெரியவந்துள்ளது.
அதேபோல் 30-ல் ஒரு ஆண் 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்து கொள்கிறார் எனத் தெரிகிறது.
யுனிசெஃப் தனது அறிக்கையின் முடிவில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற ஏழ்மையான சூழல், கிராமப்புற வாழ்க்கை, கல்வியறிவு இன்மை ஆகியனவற்றை முக்கிய காரணிகளாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், பெண் பிள்ளைகள் குழந்தைத் திருமணத்துக்கு தள்ளப்படுவதைக் குறித்து ஆய்வுகள் நடத்துவதற்கு இணையாக ஆண் பிள்ளைகளின் குழந்தைத் திருமணம் பற்றி ஆய்வுகள் அதிகம் நடத்தப்படுவதில்லை என்ற அக்கறையை பதிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT