Published : 05 Jun 2019 02:01 PM
Last Updated : 05 Jun 2019 02:01 PM
இந்தோனேசியாவில் கடலில் சரக்குகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 17 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இந்தோனேசிய சரக்குக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த ஒருவர் கிடைத்துள்ள நிலையில் மீதியுள்ள 17 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையே மேலும் தொடர்கிறது. கப்பல் விபத்தில் மூழ்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
கிழக்கு இந்தோனேசியாவுக்கு சொந்தமான சுலவேசி தீவின் வடக்கு முனையில், பிட்டங்கில் இருந்து தெற்கில் உள்ள மொரோவாலி பகுதிக்கு அக்கப்பல் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
இதுகுறித்து மீட்பு அதிகாரி பாஸ்ரானோ தெரிவிக்கையில், ''சரக்குக் கப்பலில் பயணம் செய்த 18 பேரும் காணாமல் போயினர். எனினும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டும் ஒரு துப்பும் கிடைத்தாத நிலையே நேற்று வரை தொடர்ந்துள்ளது.
நேற்று 35 வயதுமிக்க ஒருவர் உயிர்க்காப்பு ஜாக்கெட்டில் மிதந்துகொண்டிருந்தது அவ்வழியே சென்ற கப்பல் மூலம் தெரியவந்தது. விபத்தில் மூழ்கியும் நான்கு நாட்களாக ஒருவர் பிழைத்துள்ளது தெரியவந்தது.
அவர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலில் அவருடன் பயணம் செய்த மீதியுள்ள 17 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான சரக்குக் கப்பல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.
கேஎம் லிண்டாஸ் தைமூர் சரக்குக் கப்பலின் நீளம் 80 மீட்டர். இக்கப்பல் சிமெண்ட் ஏற்றிச்சென்றது. திடீரென கப்பலின் என்ஜின் எந்திரம் செயலிழந்தது. அப்போது கடலின் அலைகள் கடுமையாக இருந்தன. இந்நிலையில்தான் கப்பல் விபத்துக்குள்ளானது'' என்றார்.
இந்தோனேசியாவில் 17 ஆயிரம் தீவுகள் உள்ளதால் கடல் போக்குவரத்தையே அந்நாடு பெருமளவில் நம்பியுள்ளது. எனினும், பாதுகாப்பு தரமற்ற நிலையிலேயே கப்பல்களும் மற்றவகைப் படகுகளும் இங்கு பயன்படுத்தப்படுவதால், கடல் விபத்துகள் என்பது வெகு சாதாரணமாக நடக்கிறது.
கடந்த ஆண்டு சுமத்ரா தீவில் அமைந்து உலகின் ஆழமான ஏரியொன்றில் மூழ்கி இந்தோனேசியக் கப்பல் மூழ்கியபோது அதில் பயணம் செய்த 160 பேர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT