Published : 16 Mar 2018 04:41 PM
Last Updated : 16 Mar 2018 04:41 PM
சிரியாவில் உள்நாட்டு போர் சற்று ஓய்ந்து இருந்த நிலையில் அங்கு மீண்டும் அரசு படைகள் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுடா பகுதியை மீட்பதற்காக, அந்நாட்டு அதிபரின் ஆதரவுப் படையினர் இரண்டு மாதங்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காலை 9 மணி முதல் 2 மணி வரையில் (5 மணி நேரம்) மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என சிரியா அரசுப் படைக்கு ஆதரவாக சண்டையிடும் ரஷ்யா அறிவித்தது. இதனால் சண்டை நிறுத்த அறிவிப்பையும் மீறி அவ்வப்போது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
அங்கு சில நாட்களாக தாக்குதல்கள் குறைந்து வந்த நிலையில், இன்று, அதிபர் ஆதரவு படையினர் விமானங்கள் மூலம் கிழக்கு கவுடாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கபர் பத்னா என்ற பகுதியில் நடந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசயம் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT