Published : 20 Mar 2018 04:40 PM
Last Updated : 20 Mar 2018 04:40 PM
மறைந்த லிபியா தலைவர் முவாமர் கடாஃபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கில் யூரோக்களைப் பெற்றது தொடர்பாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி செவ்வாயன்று போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்குத் தொடர்பான முழு விவரம் அறிந்த நீதித்துறையைச் சேர்ந்த வட்டாரங்கள் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய போது முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி நாண்ட்டியர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
2007 அதிபர் தேர்தலின் போது சர்கோஸிக்கு இந்த நிதி வந்ததாக சர்ச்சை கிளம்பியது, அதனை சர்கோஸியின் பணிக்குழு தலைவர் மறுத்து வந்தார்.
இது தொடர்பாக 2013-லிருந்தே விசாரணை நடைபெற்று வந்தாலும் 3 ஆண்டுகள் கழித்து பிரெஞ்ச்-லெபனான் தொழிலதிபர் ஜியாத் டேக்கிடின் புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட் என்பதற்கு அளித்த பேட்டியில் சர்கோஸிக்கு நெருக்கமான கியாங் மூலம் தான் 5 மில்லியன் யூரோக்கள் அடங்கிய தொகையை சூட்கேஸ்களில் வைத்து அனுப்பியதாக தெரிவித்ததையடுத்து பிரச்சினை சூடேறியது.
கடாஃபி ஆட்சி 2007 தேர்தலின் போது சர்கோஸிக்கு 50 மில்லியன் யூரோக்களை வழங்கியது ஏன் சர்ச்சையானது, ஏன் சட்ட விரோதமானது என்றால் சட்டப்பூர்வ தேர்தல் நிதியாக அதிகபட்சம் 21 மில்லியன் யூரோக்களைத்தான் ஒருவர் பெற முடியும். இந்தத் தொகையை சூட்கேஸ்களில் வைத்து 3 தவணையாக உள்துறை அமைச்சகத்தில் வைத்துக் கொடுத்ததாக தொழிலதிபர் ஜியாத் டேக்கிடின் கூறினார். அப்போது சர்கோஸி உள்துறை அமைச்சராக இருந்தார்.
இதே ஜியாத் டேக்கிடின் 1995-ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி எடுவர்ட் பலதுருக்கு சட்ட விரோதமாகப் பணம் அளித்து பிரான்ஸ் நீதித்துறை விசாரணையில் சிக்கியிருந்தார். பிரெஞ்ச் நீர்மூழ்கிக்கப்பல்களை பாகிஸ்தானுக்கு விற்றது தொடர்பான கமிஷன்கள் மூலம் இந்தத் தொகையை அவர் அளித்ததாகத் தெரியவந்தது.
சர்கோசி பிரான்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு கடாஃபியுடன் சிக்கலான உறவுகள் கொண்டிருந்தார் சர்கோஸி. அதிபரானவுடனேயே அரசு விருந்தாளியாக கடாஃபியை அழைத்து நல்ல முறையில் மரியாதை செலுத்தி கவனித்தார் சர்கோஸி. ஆனால் இதன் பிறகே கடாஃப் படைகளுக்கு எதிரான நேட்டோ படைகளின் தாக்குதலில் பிரெஞ்ச் படைகளை முன்னணியில் நிறுத்தினார் சர்கோஸி. இன்று வரை தனக்கு உதவியருக்கு சர்கோஸி ஏன் இப்படிச் செய்தார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 2012 தேர்தலின் போதும் அளவுக்கதிகமாக செலவு செய்ததாக பிரான்ஸ் நீதிபதிகள் முதன்மைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT