Published : 16 Apr 2014 11:39 AM
Last Updated : 16 Apr 2014 11:39 AM

தென்கொரிய கப்பல் கவிழ்ந்தது: 300-க்கும் மேற்பட்ட பயணிகள் கதி என்ன?

தென் கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் புதன்கிழமை காலை கப்பல் கவிழ்ந்ததில் இரண்டு பேர் இறந்தனர். கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. 480 அடி நீளமும், 6,586 டன் எடையும் கொண்ட இந்தப் கப்பல் 1994-ம் ஆண்டு ஜப்பானில் கட்டப்பட்டது. இதில் அதிகபட்சமாக 900 பேர் பயணிக்கலாம்.

எனினும், சம்பவ தினத்தன்று இந்தப் கப்பலில் 477 பயணிகள் இருந்தனர். தவிர 150 வாகனங்களும் இருந்தன. தென்மேற்குக் கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ஜெஜூ தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

புதன்கிழமை அதிகாலையில் உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. உடனே, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர் களும் மீட்புப் பணியில் இறங்கின.

கடைசியாக கிடைத்த தகவலின்படி 164 பேரை மீட்டிருப்பதாகவும், இரண்டு பேர் மரணமடைந்துவிட்டதாகவும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்கத்தில் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாக அமைச்சகம் 368 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 100 பேர் மாயமானதாகவும் தகவல் தெரிவித்தது. ஆனால், பின்னர் அந்தக் கணிப்பு தவறானது என்று கூறப்பட்டுள்ளது.

கப்பலில் பயணித்தவர்களில் பெரும் பாலானவர்கள் சியோலில் உள்ள டான்வொன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளும் ஆசிரியர்களும் ஆவர். இந்தப் கப்பல் விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி வழியாகச் செல்லும் படகுகள் எதுவும் இயக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x