Last Updated : 03 Mar, 2018 03:37 PM

 

Published : 03 Mar 2018 03:37 PM
Last Updated : 03 Mar 2018 03:37 PM

‘விண்வெளியில் மூவிழிகள்’: பயங்கர சூறாவளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் சூப்பர் செயற்கைக் கோள்- நாசா வெற்றிகரம்

உலகிலேயே அதிதொழில்நுட்ப வானிலை ஆய்வு செயற்கைக் கோளை நாசா விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. இதன் மூலம் மேற்கு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பெரும்புயல்கள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை இனி துல்லியமாகக் கணிக்க முடியும் என்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்.

கேப் கனவரால் விமானப்படை ஏவுதளத்திலிருந்து அட்லாஸ் வி ராக்கெட் மூலம் கோஸ்-எஸ் என்ற இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு விண்வெளி சுழற்வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது.

11 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்த உயர் தொழில்நுட்ப விண்கலம் நாசாவின் 2வது இத்தகைய முயற்சியாகும். இதன் மூலம் கடும் சூறாவளிகள், காட்டுத்தீ, காட்டு வெள்ளம், பயங்கர நிலச்சரிவு மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகள் பற்றி ஆச்சரியப்படும் அளவுக்கு முன் தகவலை அளிப்பதோடு படுதுல்லியமான படங்களையும் அனுப்பி பேரழிவிலிருந்து காக்கும் செயலைச் செய்யும் என்று விஞ்ஞானிகள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொடரில் கோஸ்-16 என்ற முதல் செயற்கைக் கோள் அட்லாண்டிக் மற்றும் கிழக்குக் கடற்கரையை கண்கொத்திப்பாம்பாக கண் காணித்து வருகிறது. இதுதான் தற்போது பசிபிக் கடல் பகுதிக்கும் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோஸ் ரக செயற்கைக் கோள் வானிலை உள்ளிட்ட இயற்கைச் சீற்றக் கணிப்பில் புதிய தாவலை மேற்கொண்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விண்ணில் மூவிழிகள்:

ஓராண்டில் வானிலை, கடல் நிலவரங்களை அறியும் 3வது செயற்கைக்கோளை நாசா அனுப்பியுள்ளது. நாசா இதனை வர்ணிக்கும் போது, “விண்வெளியில் மூவிழிகள்” என்று வர்ணிக்கிறது.

ஏற்கெனவே கோஸ்-16 அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் டெக்ஸாஸ் காட்டுத்தீ நிவாரண, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதும், ஹார்வி புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரணங்களும் திறம்பட மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இர்மா சூறாவளியின் தாறுமாறான பாதையைத் துல்லியமாகக் கணித்த கோஸ் 16 செயற்கைக் கோள் அதிவேகமாக தீவிரமடைந்த மரியா சூறாவளியின் பாதையையும் அது துல்லியமாகக் கணித்தது.

ஹார்வி சூறாவளியின் போது சூறாவளியின் மையக்கண்ணில் மேகங்கள் இழுக்கப்பட்டு மூழ்குவதை கோஸ் 16 செயற்கைக் கோள் துல்லியமாக படம் பிடித்துக் காட்டியதால் தான் அது 2ம் நிலை சூறாவளியிலிருந்து 4ம் நிலை சூறாவளியாக உயர்த்தப்பட்டது.

அதே போல் ஒக்லஹாமா, டெக்ஸாஸ் காட்டுத்தீயை முன்கூட்டியே கணித்தது கோஸ் 16. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ஆபத்தான இயற்கைச் சீற்றங்களுக்குப் பிறப்பிடமான மேற்குக் கடற்கரை, அலாஸ்கா, ஹவாய், மெக்சிகோ, மத்திய அமெரிக்கா ஆகியவற்றையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறது கோஸ்-எஸ் செயற்கைக் கோள். ஈக்வடாருக்கு மேலே 22,000 மைல் உயர் சுற்றுவட்டப்பாதைக்கு இந்த செயற்கைக் கோள் சென்றடைந்தவுடன் கோஸ்-17 என்று பெயர் பெறும்.

இந்தச் செயற்கைக் கோள் அனுப்பும் தகவல்களை ஆவலுடன் நாசா விண்வெளி அறிவியல் நிபுணர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த2 புதிய செயற்கைக் கோள்களுடன் மேற்கு ஆப்பிரிக்கா அருகே சூறாவளிச்சீற்றம் தோற்றம்கொள்ளும் அட்லாண்டிக் மற்றும் அமெரிக்கா நெடுக, பசிபிக், நியூஸிலாந்து ஆகிய பகுதிகளின் பேரழிவு இயற்கைச் சீற்றங்களை முன் கணிக்கும் முழு அமைப்பை நாசா வந்தடைந்துள்ளது.

இந்த கோஸ் தொடரில் இன்னும் 2 செயற்கைக் கோள்கள் திட்டமிடப்பட்டுள்ளன, இதில் கோஸ்-டி என்பட்யு 2020-ம் ஆண்டிலும் கோஸ்-யு என்பது 2024-ம் ஆண்டிலும் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x