Last Updated : 17 Mar, 2018 03:54 PM

 

Published : 17 Mar 2018 03:54 PM
Last Updated : 17 Mar 2018 03:54 PM

பாம்புகளுடன் வாழ்க்கை விஷம்கக்கும் நாகத்தால் மரணம்: மலேசிய பிரபல தீயணைப்பு வீரரின் பரிதாப கதை

 

மலேசியாவைச் சேர்ந்த பிரபல பாம்புபிடிக்கும் வல்லுநராகவும், தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்தருமான அபு ஜாரின் ஹூசைன் விஷம் கக்கும் நாகப்பாம்பு கடித்து சிகிச்சை பலன்அளிக்காமல் உயிரிழந்தார்.

கோலாலம்பூர் தீயணைப்பு துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் 33 வயதான அபு ஜாரின் ஹூசைன். இவர் தீயணைப்பு துறையில் மீட்புப்பணியோடு மட்டுமல்லாமல், பாம்புகள் எங்காவது இருக்கிறதென்று தகவல் கிடைத்தால் உடனே அங்கு சென்று பாம்புகளை கொல்லாமல், அதை பாதுகாப்பாக பிடித்துவந்து உயிரியல்பூங்காவில் விடும் பணியையும் செய்து வந்தார். விடுமுறையில் இருந்தால் கூட மக்கள் அழைத்தால் முகம் சுளிக்காமல் சென்று இலவசமாக சேவை செய்து வந்தார்.

ஹூசைனின் பணி அந்த நாடுமுழுவதும் அனைத்து மக்கள் மத்தியில் அறியப்பட்டதாகும். மக்கள் மத்தியில் ‘பாம்பின் நண்பர்’ என்று செல்லமாக ஹூசைன அழைக்கப்பட்டார்.

மிகக் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம், விஷம் கக்கும் நாகம், மாம்பா எனப்படும் ஆஸ்திரேலியன் வகை கொடிய விஷப் பாம்புகளை வைத்து ஹூசைன் செய்த சாகசக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமாகும். பல்வேறு கலை நிகழ்ச்சிகலையும் இந்த பாம்புகளை வைத்து ஹூசைன் நடத்தியுள்ளார்.

ஹூசைன் வீட்டிலும் சர்வசாதாரணமாக பாம்புகள் உலாவரும். பாம்புகளுடன் சகஜமாகப் பழகி நண்பராக இருந்து வந்தார். பாம்புக்கு முத்தம் கொடுப்பதும், மூக்கில் பாம்பை நுழைத்து, வாய் வழியாக எடுப்பதும், ராஜநாகத்துடன் படுத்து தூங்குவதும், அருகில் வைத்து புத்தகம் படிப்பதும், சாப்பிடுவதும் என இவரின் வீடியோக்கள் இணைதளத்தில் மிகப் பிரபலமாகும்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் ஒரு இடத்தில் விஷம் கக்கும் நாகம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதைப்பிடிக்கும் முயற்சியில் ஹூசைன் ஈடுபட்டு இருந்தபோது, அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஹூசைன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையின் இயக்குநர் கிருதீன் தர்மன் கூறுகையில், ‘அபு ஜூரின் விடுமுறையில் தனது குடும்பத்தாருடன் இருந்தாலும், பொதுமக்களில் யாராவது பாம்பு பிடிக்கக் கோரி செல்போனில் அழைத்தால், உடனை சென்றுவிடுவார். ஆனால், துரதிருஷ்டவசமாக கடந்த 4 நாட்களுக்கு முன் அவரை விஷம் கக்கும் நாகம் அவரை கடித்துவிட்டது. இந்த பாம்பின் ஒரு கடிவிஷம் ஒரு யானையை கொல்லும் அளவுக்கு கொடூரமானதாகும். மிகச்சிறந்த அதிகாரியை இழந்துவிட்டோம், சோகமான தருணமாகும்’ எனத் தெரிவித்தார்.

அபு ஜூரின் தான் மட்டுமல்லாமல், தன்னுடன் பணியாற்றும் சகஊழியர்களுக்கும் பாம்பு பிடிக்கும் கலையை கற்றுக்கொடுத்து, விழிப்புணர்வு ஊட்டி வந்துள்ளார். அபு ஜுரின் பாம்பு பிடிக்கும் கலையை தனது தந்தையிடம் இருந்து கற்றுள்ளார். இதற்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அபுஜூரினை பாம்பு கடித்து இருநாட்கள் கோமாவில் இருந்து உயிர் பிழைத்துள்ளார்.

இந்நிலையில் பாம்புக்கடியால் உயிரிழந்த அபு ஜுரின் அவரின் சொந்த நகரான கெலாண்டன் நகரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x