Published : 23 Mar 2018 07:43 AM
Last Updated : 23 Mar 2018 07:43 AM
‘கே
ம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற பெயர் சில தினங்களாக செய்திகளில் அடிபடுகிறது. இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் வெற்றி - தோல்விகளை முடிவு செய்ய உதவும் பணியைச் செய்து வருகிறது.
நேர்வழியில் அல்ல
தேர்தலில் வெற்றிபெற நேர்வழியில் உதவி செய்வதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், இந்நிறுவனம் குறுக்கு வழியில் எதையும் செய்யும் என்ற உண்மை வெளிவந்துள்ளது. இதை புலனாய்வு செய்து வெளியிட்டிருப்பது 1791-ம் ஆண்டில் இருந்து வெளிவரும் மதிப்புமிக்க ‘சண்டே அப்சர்வர்’ இதழாகும். ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சியும் இந்த மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ உதவியுள்ளது. ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவின் கூட்டணி குறித்த குற்றச்சாட்டில் இந்நிறுவனம் பின்னணியாக இயங்கி உள்ளது. உலகில் உள்ள 5 கோடிக்கும் அதிகமானோரின் முகநூல் தகவல்களை இந்நிறுவனம் திருடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘பிக் டேட்டா, டேட்டா மைனிங்’ போன்ற தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்நிறுவனத்தால் உலகின் எந்த தகவலையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் தகவல்களை திருடியதற்காக இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸ் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல்களில் போலியான செய்திகளை பரப்புதல், எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாலியல் தொழிலாளிகளை அனுப்பி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் அவர்களை சிக்க வைத்தல், லஞ்சம் கொடுத்தல், சிக்க வைக்கும் வீடியோக்களை பதிவு செய்து அதை பரப்புதல் என பல நேர்மையற்ற வழிகளை இந்நிறுவனம் பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளி யேற நடந்த வாக்கெடுப்பிலும் இந்நிறுவனம், தனது வேலை யைக் காட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற் காக இந்நிறுவனத்தை, இங்கிலாந்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்நிறுவனம் அர்ஜென்டினா, செக் குடியரசு, கென்யா, நைஜீரியா தேர்தல்களில் தனது நேர்மையற்ற பணிகளைச் செய்துள்ளது.
இந்தியாவிலும்...
இவை எல்லாவற்றையும்விட நம்மை அச்சுறுத்துவது, இந்நிறுவனம் இந்தியாவிலும் கடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவி செய்துள்ளது என்ற தகவல்தான். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில்கூட இந்நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி சார்ந்த ஆய்வறிக்கை என்ற பெயரில்கூட இந்நிறுவனம் பொய்யான தகவல்களை பரப்பியுள்ளது. இந்நிறுவனம் நேர்மையற்ற வழிகளில் மக்களின் முகநூல், ட்விட்டர், செல்போன் வழியாக தகவல்களை பரப்பும் செயல்களை செய்வது மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. இதன் பணியாளர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பணியாற்றுவது தெரியவந்துள் ளது.
சமூக வலைதளங்களில் ஏராளமான பொய்யான தகவல்கள் உலா வந்து, பத்திரிகையாளர்களின் பணி மிகவும் சவாலாக மாறிவிட்ட நிலையில், இதுபோன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தலின் முடிவையே மாற்றியமைக்க அதிநவீன தொழில்நுட்பங்கள், பணபலம், சர்வதேச செயல்திட்டங்களுடன் இறங்கி வருவது வரப்போகும் தேர்தல்களில் பத்திரிகையாளர்களுக்கு மேலும் சவாலை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேல், மாறிவரும் தொழில்நுட்ப மற்றும் மோசடி வளர்ச்சிகளுக்கு மத்தியில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற முறைகேடுகள் உணர்த்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT