Last Updated : 24 Mar, 2018 04:44 PM

 

Published : 24 Mar 2018 04:44 PM
Last Updated : 24 Mar 2018 04:44 PM

பிணையக் கைதிக்கு பதிலாக தீவிரவாதியின் பிடிக்குச் சென்ற போலீஸ் மரணம்: பிரான்ஸ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணையக் கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பிரான்ஸ் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கார்டியன், ''பிரான்ஸில் தென்பகுதியிலுள்ள ட்ரெப் நகரில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், அங்குள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டார். அந்த அங்காடியைச் சுற்றி வளைத்த போலீஸார் பிணையக் கைதிகளை விடுவிக்கும்படி எச்சரிக்கை விடுத்து பதில் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கி ஏந்திய நபரிடமிருந்து பெரும்பாலானவர்களை மீட்ட  நிலையில் அந்த நபர்  ஒரு பெண்ணை மனிதக் கேடயமாக வைத்திருந்தார்.

தொடர்ந்து அங்காடிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், அங்காடிக்குள் இருக்கும் பிணையக் கைதிக்குப் பதிலாக போலீஸ் ஒருவரை உள்ளே அனுப்பி அப்போலீஸ் அதிகாரி எடுத்துச் செல்லும் கைப்பேசி மூலம் அங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ளலாம் என பிரான்ஸ் போலீஸார்  முடிவு செய்தனர்.

இந்தப் பணியை செய்வதற்காக போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம் தானாக முன் வந்து ஒப்புக் கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அர்னாட் உட்பட நான்கு பேரை அந்தத் துப்பாக்கி ஏந்திய நபர் சுட்டதில் அவர்கள் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ரிடவுனே லக்திம் என்றும் அவர் போலீஸாரால் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் பிரான்ஸ் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேம் மக்ரோன், ''மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார் அர்னார். இது அவரின் தனித்துவமான தியாகத்தைக் காட்டுகிறது'' என்று கூறியுள்ளார்.

பிணையக் கைதிக்கு பதிலாகத் தைரியமாக உட்சென்ற அர்னாட் பெல்ட்ரேமின் மரணம் பிரான்ஸ் மக்களைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அர்னாட்டின் தியாகத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x