Last Updated : 13 Mar, 2018 12:28 PM

 

Published : 13 Mar 2018 12:28 PM
Last Updated : 13 Mar 2018 12:28 PM

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் - ட்ரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை

வடகொரியா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்- னும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஒருவர் நாட்டை ஒருவர் அழித்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் திருப்பம் ஏற்பட்டது.

தென் கொரியாவின் அழைப்பை ஏற்று வடகொரிய பிரதிநிதிகள் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் மூன், வடகொரியாவுக்கு பயணம் செல்ல உள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஓரளவு தணிந்தது.

அதன் அடுத்தகட்டமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் நேரில் சந்தித்து, அணுஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகை கூறும்போது, "கிம் - ட்ரம்ப் சந்திப்பு தொடர்பான வடகொரியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். வடகொரியா நிறைய வாக்குறுதிகளை அளித்திருக்கிறது அதில் அந்நாடு உறுதியாக இருக்கும் என்று நம்புகிறோம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சந்திப்பு குறித்து திட்டமிடப்படும்” என்று கூறியுள்ளது.

முன்னதாக வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகலாம். அல்லது உலக நாடுகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒப்பந்தங்கள் ஏற்படலாம். இருவரும் சந்திக்கும் போது எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை நான் உணர்ந்தால் சிறிது நேரத்தில் எழுந்து வந்துவிடவும் வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x