Published : 25 Mar 2018 11:53 AM
Last Updated : 25 Mar 2018 11:53 AM
அமெரிக்காவில், ‘‘நம் வாழ்க்கைக்காக அணி திரளுங்கள்’’ என்ற முழக்கத்துடன், துப்பாக்கிச் கலாச்சாரத்திற்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் தன்னெழுச்சி மக்கள் பேரணிகள் நேற்று நடைபெற்றன.
அமெரிக்காவில் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கர்களில் ஏறக்குறைய பாதி பேர் சொந்தமாக துப்பாக்கிகள் வைத்திருப்பதால் துப்பாக்கியால் சுடுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் புகுந்து காரணமின்றி துப்பாக்கியால் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,500- க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; கிட்டத்தட்ட நாளுக்கொன்று ஒரு துப்பாக்கிச் சூடு நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் பெரிய அளவில் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. பல்வேறு நகரங்களிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். ‘‘நம் வாழ்க்கைக்காக அணி திரளுங்கள்’’ என்ற கோஷத்துடன் பென்சில்வேனியா, நியூயார்க், வாஷிங்டன் என பல நகரங்களிலும் பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் சனிக்கிழமை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 800 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அமெரிக்கர்களின் துப்பாக்கி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவாக பேரணிகள் நடைபெற்றன.
இந்த பேரணியை ஆதரித்து சமூகவலைதளங்களில் அமெரிக்கர்கள் பதிவிட்டு வருகின்றனர். துப்பாக்கிக்கு எதிராக அனைவரும் கைகோர்ப்போம் என அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கிக்கு எதிராக தொடர்ந்து மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும் என அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT