Last Updated : 02 Mar, 2018 05:45 PM

 

Published : 02 Mar 2018 05:45 PM
Last Updated : 02 Mar 2018 05:45 PM

சிரியாவில் நிவாரணப் பொருட்களுக்கு அனுமதி மறுப்பு: 4 லட்சம் மக்கள் தவிப்பு

சிரியா மற்றும் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் 4 லட்சம் அப்பாவி மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரியப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.

தற்போது கிளர்ச்சியாளர்கள் கடைசி வசம் உள்ள கிழக்கு கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரியா - ரஷ்ய கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

இந்த நிலையில் சிரிய அரசு வான்வழித் தாக்குதலில் குளோரின் வாயுவை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. சிரியாவில் அரசுப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காலை 9 மணி முதல் 2 மணி வரையில் (5 மணி நேரம்) மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என சிரியா அரசுப் படைக்கு ஆதரவாக சண்டையிடும் என்று ரஷ்யா அறிவித்தது.

எனினும் போர் நிறுத்தம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. சிரியாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும் அங்கு நிலைமை மாறவில்லை. தாக்குதல் சம்பவங்களால் மனித உயிரிழப்பும், காயமடைவதும் தொடர்கிறது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக சுமார் 40 லாரிகள் காத்திருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு சிரியா அரசுப் படையினர் அனுமதி அளிக்கவில்லை. மருத்துவ உதவிக் குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி அல்சைபுனியா பகுதியில் தரைவழி தாக்குதலும் நடந்து வருகிறது. போர் நிறுத்தம் அமலில் உள்ள போது, அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதி நிலைமை மிக மோசமடைந்துள்ளது. இதுகுறித்து 'ஒயிட் ஹெல்மெட்' மீட்புக் குழுவினர் கூறுகையில், ''அந்தப் பகுதிக்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x