Last Updated : 13 May, 2019 09:00 PM

 

Published : 13 May 2019 09:00 PM
Last Updated : 13 May 2019 09:00 PM

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு: இரு சமூகத்தினரிடையே மோதலால் அரசு திடீர் அறிவிப்பு

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இரவு நேரத்தில் 6 மணிநேர ஊடரங்கு உத்தரவை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் வைத்திருந்த கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இன்று மாலை இலங்கை அரசு உத்தரவிட்டது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், ஹோட்டல்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 250 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் இலங்கை அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினர் வைத்திருக்கும் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன.

இந்நிலையில், வடமேற்குப் பகுதியில் உள்ள குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாளசூரியா ஆகிய  இடங்களில் முஸ்லிம் சமூகத்தினர் வைத்திருந்த கடைகள், வீடுகள், மசூதி மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திச் சென்றது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு அங்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிட்டு இருந்தது. நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், காலை 11 மணி அளவில் ஹெட்டிபோலா எனும் நகரில் மீண்டும் இரு சமூகத்தினருக்கு இடையே திடீரென வன்முறை வெடித்தது. இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாளசூரியா ஆகிய  நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே முஸ்லிம் சமூகத்தினருக்கும், சிங்கள சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றுக்கும் இலங்கை அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x