Last Updated : 02 May, 2019 06:48 PM

 

Published : 02 May 2019 06:48 PM
Last Updated : 02 May 2019 06:48 PM

அமெரிக்காவுக்கு நாடுகடத்தலா?- ஜூலியன் அசாஞ்சே போராட்டம்

அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கில் ஜூலியன் அசாஞ்சே மீதான விசாரணைக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று பிரிட்டிஷ் நீதிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (மே 2) பேசிய நீதிபதி மைக்கேல் ஸ்னோ, ''ஜூன் 12-ம் தேதியில் விரிவான விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

 

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா தொடர்பான பல தரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்களை,  பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது.

 

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இ-மெயில் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அவர் மீது  குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து அசாஞ்சேவுக்கு இணைய வசதி மறுக்கப்பட்டு  24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

 

இதைத் தொடர்ந்து 47 வயதான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர்.  ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் அசாஞ்சே தற்போது லண்டலின் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

அப்போது பேசிய அவர், ''நான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு விருதுகளை அள்ளித்தந்த ஜர்னலிசத்தில் இருந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக நான் சரண் அடைய மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

 

2012-ல் பிரிட்டிஷ் நீதிமன்றம் வழங்கிய பிணையை மீறி, தப்பிச் சென்றதால் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் (கிட்டத்தட்ட 1 ஆண்டு) சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x