Published : 28 Apr 2014 05:09 PM
Last Updated : 28 Apr 2014 05:09 PM

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உள்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை

எகிப்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த போராட்டங்களின்போது, படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மோர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உட்பட 683 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, ராணுவத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தலைநகர் கெய்ரோ உள்பட பல இடங்களில் கடந்த வருடம் போராட்டம் நடத்தப்பட்டது. அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மோர்சிக்கு ஆதரவான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் 529 பேருக்கு கடந்த மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான மற்றொரு வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் மூத்த தலைவர் முகமது படீய் உள்பட அவரது ஆதரவாளர்கள் 683 பேருக்கு எகிப்து நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பால் எகிப்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தத் தீர்ப்பு விவரம் வெளியானதும், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் கதறி அழுதனர்.

முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், கடந்த ஆண்டு தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x