Published : 22 Sep 2014 04:58 PM
Last Updated : 22 Sep 2014 04:58 PM
பயனரிடம் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று திட்டவட்டமாக பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பயனரிடம் தங்கள் பக்கங்களுக்காக மாதம் ரூ.181.90 வீதம் வசூலிக்க உள்ளதாக, நையாண்டிச் செய்திகளை வெளியிடும் இணையதள நிறுவனமான 'நேஷனல் ரிப்போர்ட்' செய்தி வெளியிட்டது.
மேலும், "நிறைய யோசனைகளுக்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளோம். மாத சந்தா வசூலிக்க வேண்டியது எங்களது நிறுவனத்திற்கு கட்டாயமாகிவிட்டது. இதனை தற்போது அமல்படுத்தாவிட்டால், ஃபேஸ்புக் நாளை இல்லாமல் போகவே வாய்ப்பு உள்ளது" என்ற மார்க் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டது.
இந்தச் செய்தியை அடுத்து, ஃபேஸ்புக் பயன்படுத்தோவோரிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எல்லை என்றும், இது குறித்த செய்தி போலியானவை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆர்ஸ் டெக்னிக்கா கூறும்போது, "எங்களுக்கு பயனரிடமிருந்து தொடர்ந்து இதுகுறித்து கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒரு பொய்ச் செய்தி.
இணையத்தில் வெளியாகும் நையாண்டிச் செய்திகளையும் உண்மைச் செய்திகளையும் மக்கள் பிரித்துப் பார்க்க தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
இதனிடையே, தங்களது செய்திகள் நையாண்டிக்காகவே வெளியிடப்பட்டவை என்றும், தங்களது இணையதளத்தில் இது போன்ற செய்திகள் வருவது சாதாரணம்தான் என்றும் 'நேஷனல் ரிப்போர்ட்' தெரிவித்துள்ளது. அத்துடன் இனி, இதுபோன்ற செய்திகளில், பொய்ச் செய்தி என்பதற்கான குறியீடு வழங்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT