Published : 24 Sep 2014 10:43 AM
Last Updated : 24 Sep 2014 10:43 AM
சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன ராணுவத்தினரைப் பார்த்து ‘பிராந்தியப் போருக்கு தயாராக இருக்கிறீர்களா?’ எனக் கேள்வியெழுப்பியதை, இந்திய எல்லைப் பிரச்சினையுடன் இணைத்துப் பார்ப்பது வெறும் அனுமானம் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பிய அதிபர் ஜி ஜின்பிங், சீனா ராணுவத்தினரிடையே பேசினார். அப்போது, “இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், சீனாவின் மக்கள் விடுதலைப் படை பிராந்தியப் போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வெற்றி பெறும் திறனை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் அனைத்து விதமான முடிவுகளையும் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனப் பேசினார்.
இந்திய-சீன எல்லைப் பிரச்சினையை மனதில் வைத்தே, சீன அதிபர் இவ்வாறு பேசியிருக்கக் கூடும் என கருத்து எழுந்தது. இதுதொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நேற்று கூறியதாவது:
இந்திய ஊடகங்கள் இதுபோன்ற கேள்வியை எழுப்பியுள்ளன. ஆனால், இது வெறும் அனுமானம்தான். அதிபரின் இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இந்திய அரசும் மக்களும் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்தப் பயணத்தின் போது, சீன-இந்திய உறவு தொடர்பான முக்கிய முடிவுகள் கருத்தொற்றுமையுடன் எடுக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையே சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், இப்பிரச்சினைகளில் இரு தலைவர்களும் கருத்தொற்றுமையுடன் உள்ளனர். பிரச்சினைகளை நேசத்துடன் பரஸ்பர ஒற்றுமையுடன் அணுகுவர், நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வு காண்பர், எல்லையில் அமைதி தொடர்ந்து பேணப்படும் என்பது உறுதி. லடாக் பகுதியில் சீன படைகளின் நடமாட்டம் தொடர்பான தகவல்களை நாங்கள் கவனித்து வருகிறோம். ஏற்கெனவே கூறியது போல, இந்தியாவும் சீனாவும் வலிமையான, உண்மையான நட்புறவைக் கொண்டுள்ளன.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைகள் மூலம் தீர்வு காணப்படும். இந்திய-சீன ஊடகங்களுக்கு இடையேயான கலந்துரையாடலை இந்தியா ரத்து செய்து விட்டது என்ற தகவலைப் பொருத்தவரை, ரத்து என்பது சரியான வார்த்தையாக இருக்காது. தாமதமாகிறது என்பதே பொருத்தமானது. இந்தியா-சீனா இடையேயான ஒப்பந்தங்களில் எதிர்காலத்திலும் எப்பிரச்சினையும் இருக்காது. நாங்கள் இதில் நம்பிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு ஹுவா சின்யிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT