Published : 24 Apr 2019 05:59 PM
Last Updated : 24 Apr 2019 05:59 PM
முதல் முறையாக இன்னொரு கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நாஸாவின் ரோபோத் திறன் கொண்ட ‘இன்சைட்’ விண்கலம் கண்டுபிடித்துள்ளது. ‘மார்ஸ்குவேக்’ என்று அழைக்கப்படும் இந்த செவ்வாய் கிரக நிலநடுக்கம் பற்றி தற்போது தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய்கிரக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் உட்பகுதி நடவடிக்கைகளை ஆராய்வதற்கென்றே இந்த ரோபோ திறன் இன்சைட் விண்கலம் அனுப்பப்பட்டது. இதற்காகவென்றே அது வடிவமைக்கப்பட்டது.
விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதான சிக்னலை மேலும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று உள்ளிட்டவற்றினால் செவ்வாய் கிரக மேற்புற மாற்றங்கள் ஏற்படுத்திய நிலநடுக்கம் அல்ல இது, மாறாக அதன் உட்புறக்காரணிகளினால் ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“பின்னணி சப்தத்தை சேகரித்து வருகிறோம். ஆனால் முதன்முறையான இந்த நிகழ்வு புதிய ஆய்வுப்புலத்தை திறந்து விட்டுள்ளது, அதாவது செவ்வாய்கிரக நிலநடுக்கவியல் என்பதே அந்த புதிய புலம்” என்று இன்சைட் முதன்மை விசாரணையாளர் புரூஸ் பேனர்ட் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் மிகவும் பலவீனமாக இருக்கிறது, அதாவது தெற்கு கலிபோர்னியாவில் நாள்தோறும் ஏற்பட்ம் 12 சிறுசிறு நிலநடுக்கங்கள் போல் உணரப்படாமலே கூட போய்விடக்கூடியதாகவும் இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமியில் ஏற்படும் நிலநடுக்கங்களில் உருட்டல் சப்தம் அதிகம் இருக்கும், ஆனால் செவ்வாய் கிரக நிலநடுக்கத்தில் உருட்டல் சப்தம் இல்லை என்று தெரிகிறது. அதாவது 1969 முதல் 77ம் ஆண்டு வரை சந்திரமண்டல மேற்புறத்தில் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் போல் இந்த மார்ஸ்குவேக் அளவும் காலநேரமும் இருக்கலாம் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆனாலும் பூமியில் ஏற்படும் நிலநடுக்க அளவை வைத்து இந்த செவ்வாய் கிரக நிலநடுக்கத்தை கணிக்கவும் முடியாது என்றும் விஞ்ஞானிகள் ஐயமெழுப்பியுள்ளனர்.
மேலும் மார்ச் 14, ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் நிலநடுக்க சிக்னல்களை இன்சைட் வழங்கியுள்ளது. இவையெல்லாம் பற்றி விரிவான ஆய்வுகள் நடந்த பிறகுதான் அதன் தன்மை, விளைவுகள் பற்றி உலகிற்குத் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT