Published : 26 Sep 2014 10:33 AM
Last Updated : 26 Sep 2014 10:33 AM
இந்தியாவில், பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யும்படி பிரிட்டன், நார்வே, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், நேற்று முன்தினம் நியூயார்க் வந்தடைந்தார்.
பின்னர், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலிப் ஹாமண்ட், சூடான் வெளியுறவு அமைச்சர் அலி அகமது கார்டி, மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் துன்யா மமூன், நார்வே வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரெண்டே, கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்தில்தேவ் எர்லன் பெகேஸோவிச், கிரீஸ் துணைப் பிரதமர் இவாஞ்சலஸ் வென்ஸிலஸ், நைஜீரிய வெளியு றவு அமைச்சர் அமினு வாலி ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்கள், இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பு நாடாகும் இந்தியாவின் முயற்சிக்கு தங்களின் உறுதியான ஆதரவையும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் முதலீடு செய்ய, அந்நாடுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் அழைப்பு விடுத்தார். அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் போது, 100 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களைச் சந்திக்க சுஷ்மா ஸ்வராஜ் திட்டமிட்டுள்ளார். மேலும், இன்று அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடியுடன் நியூயார்க்கில் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஜி-4, ஐபிஎஸ்ஏ (இந்தியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா), பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பி ரிக்கா), காமன்வெல்த், சார்க் அமைப்பு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார். இதில், பிரேசில் வெளியுறவு அமைச்சர் பிகுர்ரிடோ மச்சாடோ, வங்கதேச வெளியுறவு அமைச்சர் அபுல் ஹாசல் மஹ்முத் அலி, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி ஆகியோருடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள் ளார். பின்னர், எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஹாஸன் சவுக்ரியுடன், இருதரப்புப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார். எகிப்துடன் அமைச்சர்கள் நிலையிலான பாலஸ்தீன பிரச்சினை குறித்த விவாதமும் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT