Published : 16 Sep 2014 04:58 PM
Last Updated : 16 Sep 2014 04:58 PM
அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் நிகழத்த உள்ள உரையை அந்த நகரம் முழுவதிலும் பிரம்மாண்ட திரைகளில் நேரலையில் ஒளிபரப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 25–ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். நியூயார்க்கில் நகரில் 26-ஆம் தேதி நடக்க இருக்கும் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், அதன் மறுநாள் (27–ஆம் தேதி) அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தின் எடிசன் கார்டன் அரங்கில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதன் பின்னர் பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக டைம்ஸ் சதுக்கத்தில் பிரத்தியேக உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையை நியூயார்க் நகரம் முழுவதிலும், பெரிய திரைகளில் ஆங்காங்கே நேரலையில் ஒளிபரப்பு செய்ய தீவிர ஏற்பாடு நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் உரையை ஆங்கிலத்தில் உடனுக்குடன் மொழிப்பெயர்ப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரின் மையப் பகுதியான டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை காண 20,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக சுமார் 40,000 பேர் விண்ணப்பத்திருந்தனர். மக்களின் ஏமாற்றத்தை தவிர்க்க, மோடியின் உரையை குரல் பதிவாக செல்போன்களில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டைம்ஸ் சதுக்கத்தில் மோடி நிகழ்த்தப் போகும் உரை, வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாக கருதப்படுகிறது. இதற்காக இந்திய அமெரிக்க சமூக அறக்கட்டளையின் மூலம் நிதி திரட்டப்பட்டும் வருகிறது.
இதுவரை இதன் மூலம், இந்திய மதிப்பில் சுமார் ஏழு கோடியே இருபது லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சிக்கு தேவையான தொகைக்கு மேல் உள்ள நிதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க போவதாகவும் இந்திய அமெரிக்க சமூக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT