Last Updated : 28 Apr, 2019 12:40 PM

 

Published : 28 Apr 2019 12:40 PM
Last Updated : 28 Apr 2019 12:40 PM

தாங்க முடியாத பணிச்சுமை: தேர்தல் பணி ஊழியர்கள் 272 பேர் மரணம்; 1,878 பேர் உடல்நலக்குறைவு-இந்தோனேசியாவில் அதிர்ச்சி

உலகின் மிகப்பெரிய ஒரேநாள் தேர்தல் வாக்குப்பதிவு என்று வர்ணிக்கப்படும் இந்தோனேசிய தேர்தல் முடிந்து 10 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் தேர்தல் கால அயராத உழைப்பு, தாங்க முடியாதப் பணிச்சுமையினால் தேர்தல் பணி ஊழியர்கள் சுமார் 272 பேர் மரணமடைந்துள்ளது இந்தோனேசியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் 1,878 ஊழியர்கள் உடல் நிலை அதீத களைப்பின் காரணமாக மோசமடைந்துள்ளது. லட்சக்கணக்கான வாக்குச்சீட்டுகளை கையிலேயே எண்ணி எண்ணிச் சோர்வடைந்துள்ளனர் தேர்தல் பணி ஊழியர்கள். இந்தச் சோர்வு மற்றும் அது தொடர்பான நோய்களுக்கு 272 பேர் பலியாகியுள்ளது அங்கு அரசு மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

260 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் ஏப்ரல் 17ம் தேதி அதிபர் மற்றும் தேசிய, பிராந்திய வேட்பாளர்கள் தேர்வுக்கன தேர்தல் வாக்குப்பதிவுகள் ஒரேநாளில் நடைபெற்றது. செலவுகளைக்குறைப்பதற்காக பலரது உயிரை காவு வாங்கியுள்ளது இந்தோனேசிய அரசு.

 

இவ்வளவு பெரிய தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகக் கூறும் இந்தோனேசிய அரசு 193 மில்லியன் வாக்காளர்களில் 80% வாக்குகள் பதிவானதைப் பெருமையானதாகவும் சாதனையாகவும் கருதுகிறது. மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள். வாக்குச்சீட்டுகளை கையில்தான் எண்ண வேண்டிய நிலை.

 

முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் எடுத்தும் இது நடந்துள்ளதாகக் கூறும் இந்தோனேசிய அரசு இறந்தவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஊழியர் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை பரிசீலித்து வருகிறது.

 

தேர்தல் பணி ஊழியர்களின் தாங்க முடியாத பணிச்சுமை குறித்து அங்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x