Published : 30 Sep 2014 09:44 AM
Last Updated : 30 Sep 2014 09:44 AM
இந்திய பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமெரிக்க எம்.பி.க்கள் பாராட்டியுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கின் மேடிஸன் சதுக்கப் பூங்காவில் அமெரிக்க இந்தியர்கள் அளித்த வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றினார். இதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஹென்றி சி. ஹேங்க் ஜான்சன், பீட் ஆல்சன், அமி பேரா, துளசி கப்பார்ட், கிரேஸ் மெங்க், சிந்தியா லூமின்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடியை பாராட்டியுள்ளனர். எம்.பி. ஹென்றி சி ஹேங்க் ஜான்சன் கூறும்போது, “தொலை நோக்குப் பார்வையுடன் மோடி செயல்படுகிறார். பல்வேறு சிறப் பான திட்டங்களை அவர் செயல் படுத்தி வருகிறார்” என்றார்.
இக்கூட்டத்தில் பாலிவுட் பாடகர் கவிதா கிருஷ்ணமூர்த்தி, ‘வைஷ்ணவ ஜனதோ, ஐ லவ் மை இந்தியா’ ஆகிய பாடல்களை பாடினார். சுமார் 18 ஆயிரம் பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
“பிரதமராக பொறுப்பேற்ற திலிருந்து 15 நிமிடங்கள் கூட ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். 21-வது நூற்றாண்டில் உலகை வழி நடத்திச் செல்வதற்கான ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது. பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தி யாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைந்தவர்களாக உள்ளனர். இவர்கள்தான் நமது தேசத்தின் சொத்து. இளைஞர்களின் ஆதரவுடன் இந்தியா முன்னேற் றமடையும். வளர்ச்சிப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வுள்ளேன்” என்றார்.
இந்திய வம்சாவளியினருக்கு விசா சலுகை
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓ.சி.ஐ. (வெளிநாடு வாழ் இந்திய குடிமகன்) என்ற அடையாள அட் டையும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு பி.ஐ.ஓ. (இந்திய வம்சாவளியினர் அடையாள அட்டை) என்ற அட்டையும் வழங்கப்படுகிறது.
ஓ.சி.ஐ. அட்டையை வைத்திருக் கும் வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியா வந்து செல்வதறகான விசா வழங்கப்படுகிறது. அதே போன்ற சலுகை, பி.ஐ.ஓ. அட்டையை வைத்திருக்கும் வெளி நாடு வாழ் இந்திய வம்சாவளியின ருக்கும் அளிக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
அதோடு, இந்தியாவுக்கு வந்த பின்பு விசா பெற்றுக்கொள்ளும் சலுகையை அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி, வரும் ஜனவரி 8, 9 தேதிகளில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருமான துளசி கப்பார்ட், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பகவத் கீதை நூலை பரிசளித்தார்.
பின்னர், அமெரிக்க இந்தியரான தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தனது மாகாணத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கிக் கூறினார்.
இந்திய தூதர் அளித்த விருந்து
பின்னர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் அளித்த விருந்தில் மோடி பங்கேற் றார். இக்கூட்டத்தில் பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மாஸ்டர் கார்ட் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா, ஹார்வர்ட் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் டீன் நிதின் நோஹ்ரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் பிரதமருடன் மோடி சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார்.
நியூயார்க் பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பொருளாதாரம், பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு, மேற்கு ஆசியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசினர். இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்தார். அதை மோடி ஏற்றுக்கொண்டார்.
நீர் மேலாண்மை, விவசாய நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பாக தனது வல்லுநர்களின் ஆலோசனையை இந்தியாவுக்கு தர தயாராக இருப்பதாக நெதன்யாகு தெரிவித்தார். பாதுகாப்பு உற்பத்தித் துறையில் 49 சதவீதம் வரை இந்தியாவில் பிற நாடுகள் முதலீடு செய்யலாம் என்பதை மோடி சுட்டிக்காட்டினார். பின்னர் நெதன்யாகு கூறும்போது, "வானமே எல்லை என்று கூறுமளவுக்கு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவை விரிவுபடுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன" என்றார்.முன்னதாக யூதக் குழு ஒன்றை சந்தித்த மோடி, "இந்தியாவில் அனைத்து சமூக மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு இடையே பாகுபாடு காண்பிக்கப்படுவதில்லை" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT