Published : 11 Apr 2019 06:54 PM
Last Updated : 11 Apr 2019 06:54 PM
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் அசாஞ்சே. 47 வயதுமிக்க அசாஞ்சே 2006-ல் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தில் ஒரு முக்கிய அங்கமாக பொறுப்பேற்றார்.
அதன்மூலம் எண்ணற்ற புலனாய்வுச் செய்திகளை வழங்கினார். அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், பென்டகனின் பழிவாங்கலுக்கு ஆளானார். அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் பட்டபாடு ஹாலிவுட் திரைக்கதைகளை விஞ்சக்கூடியது.
தப்பிச் சென்று அடைக்கலம் தேடியதுமுதல் இன்று கைதாகியுள்ளது வரை அசாஞ்சே கடந்து வந்த பாதை இதோ:
ஜூலை முதல் அக்டோபர் வரை 2010: ஆப்கன் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற போர்கள் குறித்து அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 4,70,000 ராணுவ ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இதன் பின்னர் அரசின் 2,50,000 ரகசிய (டெலிகாரம் உள்ளிட்ட) கேபிள் தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
நவம்பர் 2010: அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அசாஞ்சே அதை மறுத்தார்.
டிசம்பர் 2010: ஸ்வீடன் நீதிமன்றம் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அசாஞ்சே லண்டன் போலீஸில் தானே சென்று சரணடைந்தார். அவரை ஸ்வீடனிலிந்து நாடு கடத்துவதற்கான ஒரு கோரிக்கை நிலுவையில் உள்ளதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஸ்வீடனின் குற்றச்சாட்டுகள் அவதூறு எனக்கூறப்பட்டு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பிப்ரவரி 2011: பிரிட்டிஷ் நீதிமன்றம் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அசாஞ்சா அங்கே சென்றால் ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைத்துவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தார்.
ஜூன் 2012: இந்நிலையில் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் கோரினார். பின்னர் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அரசியல் புகலிடம் பெற்று பாதுகாப்பு கிடைத்தது.
அக்டோபர் 2013: ஈக்வடார் தூதரகம் அசாஞ்சேவை அந்நாட்டு தலைநகரமான கியூட்டோவிற்கு அனுப்பிவைக்க அனுமதி கோரியது.
ஜனவரி 2016: ஸ்வீடன் வழக்கறிஞர்கள் அசாஞ்சேவை லண்டனில் வைத்து விசாரிப்பதற்கு விடுத்த கோரிக்கையை கியூடோ நிராகரித்தது.
பிப்ரவரி 2016: அசாஞ்சே தன்னிச்சையான காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளிடமிருந்து இழப்பீடு கோர முடியும் என்றும் ஐநா பணிக்குழு தெரிவித்தது. தங்களுக்கு இதில் அதிகாரமில்லை என மறுத்தன.
ஜனவரி 2017: அவரது உரிமைகளுக்கு முழு உத்தரவாதம் தரப்படுமென்றால் அவர் அமெரிக்காவுக்குச் சென்று விசாரணையில் கலந்துகொள்ள முடியும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்தது.
மே 2017: அசாஞ்சே மீது நடைபெற்று வந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை முடித்துக்கொள்வதாக ஸ்வீடிய நீதிமன்றம் தெரிவிக்கிறது. எனினும் பிரிட்டிஷ் போலீஸார், தூதரகத்திலிருந்து அசாஞ்சே வெளியே வரும் பட்சத்தில், 2012-ல் அசாஞ்சேவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இப்பொழுதும் அவரைக் கைது செய்ய முடியும் எச்சரிக்கை விடுத்தது.
டிசம்பர் 2017: அசாஞ்சேவுக்கு ஈக்வடார் குடியுரிமை அளித்து கியூட்டோ அனுமதி வழங்குகிறது. அசாஞ்சேவுக்கு தாங்கள் குடியுரிமை அளித்துள்ள நிலையில் அவரைக் கைது செய்யாமல் தூதரகத்தை விட்டு வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டுமென ஈக்வடார் கோரிக்கையை பிரிட்டிஷ் நிராகரித்தது.
ஜனவரி 2018: அசாஞ்சே தொடர்பாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையைத் தீர்க்க ஒரு நடுவர் வேண்டுமென ஈக்வடார் தெரிவித்தது.
பிப்ரவரி 2018: உடல்நிலையைக் காரணம்காட்டி பிரிட்டிஷ் போலீஸாரால் கைது செய்யப்படுவதிலிருந்து விலக்கு பெறும் ஒரு சிறிய முயற்சியையும் அசாஞ்சே இழந்தார்.
மார்ச் 2018: மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை மீறியதாக அசாஞ்சேவுடனான அனைத்துத் தகவல் தொடர்புகளையும் ஈக்வடார் துண்டித்தது.
அக்டோபர் 2018: லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்சேவின்மீது புதிய நிபந்தனைகளை ஈக்வடார் விதிக்கிறது. அதன்படி தங்களைமீறி அசாஞ்சே செயல்பட்டால் அடைக்கலம் முடிவுக்கு வரும் என்று எச்சரித்தது.
நவம்பர் 2018: அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள், அசாஞ்சே மீது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முத்திரையிடப்பட்ட குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினர்.
ஏப்ரல் 2019: ஈக்வடார் அதிபர் லெனின் மொரெனா, அசாஞ்சே புகலிடத்தின் நிலைகளை பலமுறை மீறியுள்ளதாகக் கூறினார். அசாஞ்சே மீது உள்ள விதிமீறல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துவதற்கான தகுதி குறித்து ஆராய வரும் ஏப்ரல் 25 அன்று 'சுதந்திர உரிமைகளின் நிபுணர்' ஒருவர் அசாஞ்சேவைப் பார்க்க வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 11, 2019: இதற்கிடையில் ஈக்வடார் தூதரகம் அசாஞ்சேவுக்கு அளித்து வந்த புகலிடத் தகுதியை திரும்பப் பெற்றது. இந்நிலையில் பிரிட்டிஷ் போலீஸார் அசாஞ்சேவை கைது செய்தது.
தொகுப்பு: பால்நிலவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT